‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
- அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ ஆற்றிய உரை. -
அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில்; புலம் பெயர் படைப்பிலக்கியங்கள்’ குறித்து பேசுவதற்கு என்னை அழைத்த முனைவர் சௌ.பா. சாலாவாணிஸ்ரீ, தலைவர் முனைவர் பொ. ரமேஷ், முதல்வர் முனைவர் கி.மாரியம்மாள், முனைவர் மா. கர்ணன், மற்றும் மாணவச் செல்வங்கள், பார்வையாளர்கள் அனைவருக்;கும் எனது அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஈழத்தமிழர்களுக்குக் குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களுக்கு லண்டன் ஒரு கனவுத் தேசமாகவே இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கிய மிஷநெறிகளின் உயர்கல்வி செயற்பாடுகளாலும், லண்டன் கனவு நிரந்தரமாகவே அவர்களின் நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஆரம்பகாலங்களில் உயர் கல்வி கற்பதற்காகவும் உயர் தொழில்களை நாடியும் ஈழத்தமிழர்கள் லண்டன் நோக்கிப் புலம்பெயர்ந்திருந்தனர். மருத்துவர்களாகவும், கணக்காளர்களாகவும், உயர்கல்வி சார்ந்தும் இலண்டன் நோக்கிய புலப்பெயர்வுகள் இடம்பெற்றது.
1982ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்பின் அகதிகளாக ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் லண்டனில் தமிழ் பத்திரிகைகளின் தோற்றமும், எழுத்தாளர்களின் பிரவேசமும், புனைகதை ஆக்கங்களும், விமர்சனக் கூட்டங்களும், நூல் வெளியீடுகளும், கலை நிகழ்ச்சிகளும் வாரத்திற்கு இரண்டு முறை என்ற வகையிலாயினும் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமே உள்ளன. இப்பின்னணியிலேயே லண்டனில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்; பற்றி நான் பேச இருக்கிறேன்.
நாவல்; - சிறுகதை – கவிதை - கட்டுரை போன்றவற்றை பிரித்துக் கூறுவது மிகப்பொருத்தாக இருக்கும் என நம்புகிறேன். நாவல் இலக்கியத்தைப் படைத்தவர்கள் மற்றைய இலக்கிய வடிவங்களையும் படைத்திருப்தையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தோடு நேரத்தை மனிதிற்கொண்டு முழுப் பட்டியலையும் இங்கு சொல்வதும் சாத்தியமில்லை. முடிந்தவரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். சில நூல்கள் தவறவிட்டிருக்கலாம் என்று கூறி...