முதல் சந்திப்பு: தமிழ்நாடு கலை, இலக்கிய, சமூக, அரசியல் ஆய்வாளர் தோழர் சி.மகேந்திரன் ! இளம் அரசியல் தலைவராக ‘ இந்தியா டுடே ‘ இதழ் தேர்வுசெய்த சமூகப்போராளி ! - முருகபூபதி -
அசோக மன்னரால், இலங்கைக்கு அரசமரக் கன்றுடன் அனுப்பிவைக்கப்பட்ட அவரது புதல்வி சங்கமித்திரை பற்றி வரலாற்றில் அறிந்திருப்பீர்கள். நல்லெண்ணத்தின் அடிப்படையில் அன்று அன்பையும் அகிம்சையையும் இலங்கைக்கு போதிக்க வந்த சங்கமித்திரை பற்றி, இந்தப்பதிவில் நான் ஏன் நினைவூட்டுகின்றேன் ? காரணம் இன்றி காரியம் இல்லை. இலங்கையில் இன முரண்பாடு தோன்றி, அது ஆயுதப்போராட்ட வடிவமெடுத்தபோது நெருக்கடிகள் உக்கிரமடைந்தன. 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையின் வடமராட்சிப் பிரதேசத்தில் விமானங்கள் குண்டுகளை பொழிந்து அப்பாவிப்பொது மக்களின் உயிர்களை பலியெடுத்தன. இந்தத் தாக்குதல் சம்பவத்தை Operation Liberation என்று அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர். அவ்வேளையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பர்களாக இந்திய விமானங்கள் இலங்கை அரசின் அனுமதியின்றி வடமராட்சி வான்பரப்பில் பிரவேசித்து உணவுப்பொட்டலங்களை வீசியது.
இதனைக்கண்ட அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவும், பிரதமர் ரணசிங்க பிரேமதாசவும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் மட்டுமன்றி அரசும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்தியாவின் இந்தத் திடீர் நடவடிக்கையையடுத்து வடமராட்சித்தாக்குதல் நிறுத்தப்பட்டு, ஜே. ஆரின். அரசு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அதனால் பிறந்த குழந்தைதான் இலங்கை – இந்திய ஒப்பந்தம். அதனால், 13 ஆவது திருத்தச்சட்டம் என்ற மற்றும் ஒரு குழந்தையும் பிறந்தது. எனினும் இந்தக்குழந்தைகள் வளர்ச்சியடையவில்லை. பிறந்த இடத்திலேயே நிற்கிறது.