சிறுகதை: சுமை - குரு அரவிந்தன் -
இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.
‘எழுந்திருடா’ பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.
துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். ‘சுள்’ என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.
‘வெளியே வாடா நா..!’ தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்ட போது அவனது குரலை இவனால் இனம் காண முடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.
தள்ளாடியபடியே வெளியே வந்து, அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சப்பாத்துக் கால்களைப் பின் தொடர்ந்தான். இரும்புக் கதவுகள் பல திறந்து, மூடப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் இருந்த அதிகாரி முன் நிறுத்தப் பட்டான். இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து யாரையுமே நிமிர்ந்து பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.