பதிவுகளில் அன்று: தான்யாவின் கட்டுரை தொடர்பான எதிர்வினைகளின் தொகுப்பு!
- பதிவுகளில் (ஜூன் 2004 ) தான்யா கவிஞர் மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' என்னும் தொகுப்பை விமர்சித்துக் கட்டுரையொன்றை 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வைத்து... ' என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். இது பெரியதொரு விவாதத்தைக் கிளப்பியது. விவாதத்தில் சூடு பறந்தது. விவாதத்தில் செல்வி .வ. உருத்திரா (மட்டக்களப்பு, இலங்கை) , எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் , எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன், எழுத்தாளர் அநந்திதா (வினோதினி) - யாழ்ப்பாணம், எழுத்தாளர் நளாயினி தாமரைச்செல்வன் ஆகியோர் பங்குபற்றினர். தானியாவின் கட்டுரைக்கான எதிர்வினைகளின் தொகுப்பிது. -
தான்யாவின் கட்டுரை தொடர்பான சில கருத்துக்கள்! - செல்வி .வ. உருத்திரா (மட்டக்களப்பு, இலங்கை) -
'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதாகள்' எனும் நூலை முன்வைத்து தான்யா எழுதிய குறிப்பு தொடர்பாக சில முரணனான கருத்துக்களை தெளிவுபடுத்தும் விதமாகவும் தான்யா அவர்கள் சில விடயங்களை தெளிவாக்கிவிட்டு வெகுஜன ஊடகங்களுக்கு எழுதியனுப்பும் ஆக்கங்கள் தொடர்பாக கவனமெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிக் இக்குறிப்பை வரைகின்றேன். தான்யாவின் முரண்பாடான பிழையான கருத்துக்களில் முதலாவதாக அமைவது 'பெண்' சஞ்சிகை என்பது தனிப்பட்ட ஒரு நபரான சித்ரலேகா மெளனகுருவினது என்பது. அத்தகைய எடுகோளின் அடிப்படையில் தான் சில மேற்கோள் காட்டுதலுக்காக தான் 'பெண்' போன்ற பதங்களை பிரயோகித்து எழுதப்பட்டுள்ளது தான்யாவின் குறிப்பு. இது தவறானது.
'
அரசுசார்பற்ற தொண்டு நிறுவனமான சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் (இல.20 டயஸ் லேன் மட்டக்களப்பபு ) ஒரு வெளியீடாகவே 'பெண்' சஞ்சிகை வெளிவருகின்றது. இதற்கு இந்நிறுவனத்தின் வெளியீட்டுப்பிரிவு இணைப்பாளர் சே.விஜயலட்சுமி பொறுப்பாக உள்ளார். இவருக்கு முன்னைய காலங்களில் இணைப்புக்குழு உறுப்பினர்களிலிருந்து ஒவ்வொருவராக தொகுத்தளிக்கும் பொறுப்பை ஏற்று 'பெண்' வெளிக்கொணரப்பட்டது. இதனடிப்படையிலேயே பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு அவர்கள் 'பெண்' சஞ்சிகையின் இதழ்களான 2.2 4.1 5.2 6.2 ஆகியவற்றுக்கு ஆசிரியராக இருந்துள்ளார் அன்றி 'பெண்' சஞ்சிகை என்பது பேராசிரியர் சித்ரலேகா மெளனகுருவினது தனிப்பட்ட வெளியீடுகள் அல்ல. தான்யா இது பற்றி போதிய விளக்கமின்றியே அக்குறிப்பினை வரைந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.
சித்ரலேகா அவர்கள் 'சொல்லாத சேதிகள்', 'சிவரமணி கவிதைகள்' ஆகிய இரு நூல்களையும் பதிப்பித்துள்ளார். 'சொல்லாத சேதிகள்' கவிதைகளில் சிவரமணியின் இரு கவிதைகள் உள்ளன. அவ்விரு கவிதைகளும் இந்நுரலிலேயே முதல் முதல் பிரசுரமாயுள்ளன. வையகத்தை வெற்றி கொள்ள என்ற கவிதையும் ஒன்று. அது சிவரமணியினுடையது. பறத்தல் அதன் சுதந்திரத்தில் சன்மார்க்காவின் பெயரில் பிரசுரமாயுள்ளது. இத்தவறுக்கு ' பறத்தல் அதன் சுதந்திரத்தின்' ஆசிரியர்களே பொறுப்பு அன்றி சித்ரலேகா அல்ல. அவ்வப்போது போதிய தேடலின்றி அஜாக்கிரதையாக பதிப்பாளர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒருவரை பாத்திரமாக்குவது எந்த வகையிலும் தா;மமாகாது.