சாரங்கா என்ற குணாளினியை எனக்கு நீண்ட காலமாகவே எழுத்து மூலமாகவே எனக்குத் தெரியும்! திரு. ஞானசேகரன் அவர்களுடைய ’ஞானம்’ சஞ்சிகையில் இவரும் கவிதை சிறுகதை எழுதுவார்;;. நானும் எழுதுவேன். ‘ஏன் பெண்ணென்று’ என்ற ஞானம் விருது பெற்ற சிறுகதைத் தொகுதியை எனக்கு அனுப்பியிருந்தார் (2004). அதன் பின்னர் லண்டனில் சாவகச்சேரி ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு நான் மேடை அறிவிப்பாளராக சென்ற வேளைதான் 2005 – 2006 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அவரைக் குழந்தையுடன் சந்திக்க நேர்ந்தது. அது ஒரு மகிழ்வான அனுபவம் ஆனால் அன்றுகூட நேரடியாகப் பேசமுடியவில்லை. அதன் பின்னர் அவரை எனது ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியில் நேர்காணலை மேற்கொண்டபோது மிக அனுபவச்செறிவோடு செய்திருந்தார்.
இன்று இந்த கடலினை வரைபவள் என்ற கவிதைத் தொகுதியை பார்க்கும்போது மகிழ்ச்சியைத் தருகின்றது. 37 கவிதைகளை அடக்கி 116 பக்கங்களில் ஜீவநதி வெளியீடாக 2022 ஆம் வெளிவந்திருக்கிறது. கவிதைகள் இப்போ பரவலாக எல்லோராலும் எழுதப்படுகின்றது. வரவேற்பான விடயம். கவிதைகளை விரும்பிப் படிப்பேன். நல்ல கவிதைகள் என்னைத் தொடர்ந்து வரும். மனோபாவத்திற்கேற்ப ஏற்ப அதனை வாசிப்பது. அது ஒரு மாயம் என்றுதான் சொல்லுவேன். இயற்கைச் சுவையோடு, அனுபவங்களோடு, மனித உணர்ச்சிகளை காட்சிப்படுத்துவது அல்லது வெளிப்படுத்துவது கவிதை. கவிதை காலத்தைப் பின்னோக்கிச் செலுத்துகிறது. திரும்பத் திரும்பச் சந்திக்கும்போது நாம் வயதை இழந்துவிடுகிறோம். ஞாபகங்களை சேகரிக்கின்ற அதனைக் காப்பாற்றுகின்ற ஒரு பெட்டியாகப் கவிதைகளைப் பார்க்க முடிகின்றது. ஆனால் பெண்களின் பெயர்கள் வயதாவதில்லை. அது போன்றுதான் கவிதைகளைப் பார்க்கின்றேன். இன்றும் பாரதியார் கவிதை பேசப்ப:டுகின்றதுதானே!
மிக அண்மையில் ஒரு நூலை வாசித்தேன். பத்திரிகைத்துறை, எழுத்துத்துறை என நீண்ட அனுபவம்முள்ள எழுத்தாளர் ஒருவர். முகநூல் அறிமுகமானதன் பின்னர், ஏராளமான கவிஞர்கள் தமிழ் உலகில் தோன்றிவிட்டனர். இவர்கள் முன்னைய காலத்துப் புலவர்களையும் கவிஞர்களையும் விஞ்சி விடுவார்களா...? புது வெள்ளமாக அடிபட்டுப் போய்விடுவார்களா...? கோரோனாவுக்கு காலம் பதில் சொல்லும் என்பது போன்று இக்கால மீம்ஸ் உலகில் புதுக்கவிஞர்களுக்கும் காலம் பதில் சொல்லலாம் என்கின்ற கேள்வி பதில்களோடு அவரின் கவிதை பற்றிய கருத்தைச் சொல்லியிருந்தார். அது சற்று என்னையும்; சிந்திக்க வைத்தது.
கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு கவிஞர் இப்படிக் கூறுகின்றார்: மலையாளப் பெண்போல முழுவதும் திறந்திருக்கக் கூடாது – மராட்டிப் பெண்போல மூடியிருக்கவும் கூடாது. தமிழ் பெண்போல மூடியும் மூடாமலும் இருக்க வேண்டுமாம்.
அந்த வகையில் சாரங்காவின் பல கவிதைகள் ஒலிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. காலக் குதிரையின் செருமல் இக்கவிதை நல்லதொரு படிமம் - நல்லதொரு காதலை புலப்படுத்துவது போலவும், நகர்த்துவது அருமையாக உள்ளது.
பதினாறின் படிக்கட்டில்
கால் வைத்த போது,
கண்டாள் அவளை,
அதீனாவாம் தேவதையோ?
அழகான சித்திரமோ?
மதியெல்லாம் கிறுகிறுக்க.
மயங்கவைக்க கிறங்கவைக்க,
விதிசெய்த ஒரு மாய
பொன்மானோ? விண்மீனோ?
ஒரு பார்வை...
உச்சி முதல் உள்ளங்கால்வரை
குளிர்கிறதே,
அருகணைய நகர்ந்தால்...
நாசியேறும் அவள் நறுமணம்
நாள் முடிந்த பின்னாலும்
போவதில்லையே
பார்த்தால் பசி மறந்தது
பாராவிட்டால் துயில் தொலைந்தது.
வார்த்தைகளில் பேசவில்லை
விழிகளிலே பெருங் கூத்து
கோர்த்த வார்த்தை கூறமுன்னர்
பள்ளி மாறிப் போனாள்
அவன் பரிதவிச்சுப் போனான்....
இப்படித்தொடர்கிறது மிக எளிமையாக உணர்வுகள் இக்கவிதை வரிகளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறதை என்னால் பார்க்க முடிந்தது. உண்மையாகக் கவிதை ஆகச் சிறந்த புதிரை மனமென்ற கடலுக்குள் மீண்டும் மீண்டும் மோதி உடையும்போது கவிதைகள் பரிணமிக்கின்றன.
சாரங்காவின் ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ’ என்ற கவிதை பாரதியாரின் தேடிச்சோறு நிதந் தின்று – பல சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம் வாடித் துன்ப மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து – நரை கூடிதக் கிழப் பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையென பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல் - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ! இக்கவிதையை அடிக்கடி நான் மனதால் வீறுகொண்டு உச்சரிப்பதுண்டு.
இப்படி சாரங்காவின் கவிதை:
‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?
விதியின் கை நூல் பொம்மைகளாய்
ஆழ்வோம் துயரில் நெடுகவென
அகலக் கனவு கண்டீரோ?
பாரும் புலத்தில் நடப்பதனை
புதிய சந்ததி எம் மிடுக்கை
இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியில்
இடர்மிகப் பட்டு உழன்ற பிறகு
வந்தேறு குடிகளாய் அலைந்தவர்தாம்
எம் தாயும் தந்தையும்..
என்று தொடர்ந்த இக்கவிதை ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் சாட்சியாக இக்கவிதை விரிந்து செல்வதை என்னால் அவதானிக்க முடிகின்றது
‘புதுத் தமிழ் உரிமைக்கீதம் உச்சஸ்தாயிக்கு நகர்கிறது... எத்தனையோ விடயங்களை சாரங்கா அதற்குள் செதுக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சமூகப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்காமல் மானசீக உலகில் ஒரு கவிஞராலோ எழுத்தாரலாலோ பயணிக்க முடியாது, நகரமுடியாது..ஏன் என்றால் அவன் ஒரு சமூகப் பிராணி. ‘மனிதாபிமானம் என்பது என்ன அழுவதல்ல – போராடுவது – அது போர்க்குணம் மிக்கது.
மனிதனுடைய மனதை ஆராய்ந்து இன்னொரு மனிதனுக்குக் கொடுப்பது தான் படைப்பு. ‘பெண் மொழிகள் தேவையில்லை’ என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் சாரங்காவின் கருத்து என்னை வெகுவாகக் கவர்ந்தது..
மாடு, ஆடு,, கழுதை, குதிரை
பன்றி, நாய் என
மகாசக்தி பெண்ணவளை
மிதிக்கும் சமூகமே!
மயில், புறவு, மைனா, கிளி
தென்றல், தேனென
பாடுகின்றீர் , ஆடுகின்றீர்
பெண்கள் நாளிலே.
நீண்ட கவிதைகளை வாசிப்பது ஏனோ எனக்குக் கொஞ்சம் விருப்பம் குறைவு. எனக்கும் சில கவதைகள் நீண்டு அமைந்துவிடுவதுண்டு. ஆனால் சாரங்காவின் நீண்ட கவிதைகள் சிறுகதையை படிப்பதுபோன்ற உணர்வை சமூக வரலாறுகளை பிரதிபலிப்பது, பெண்ணின் உணர்வுகளை வாசகர்களின் வீடாக நிறையத் தெறிப்புகளை விந்தையாக்கி புரியவைத்தது. சாரங்கா தனக்கு இப்போ காதல் கவிதை வருவதில்லை என்று கூறினார். நான்; சொன்னேன் மிக அண்மையில் தான் நான் ‘கனவில் வந்த காதல் நாய்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட கவிதையை எழுதினேன். உடனேயே அதனை பதிவுகளுக்கு அனுப்பினேன். உடனேயே அரசியல் பக்கத்தில் அதனைப் பிரசுரித்திருந்தனர். நான் ஏன் இதனைச் சொல்கின்றேன் என்றால்... நாம் ஒன்றை எண்ணிக்கொண்டு எழுதுவோம் ஆனால் மற்றவர்களின் புரிதல் வெவ்வேறாக அமையும்.
ஆனால் சாரங்காவின் ‘வெளியும் வழியும்’ என்ற சிறிய கவிதை
எதுவுமற்ற இடத்தில்
கூர்ந்த போது
அமைதியாய் உட்கார்ந்தது
வெளி
போகும் திசை
தீர்மானத்தின் பின்னர்
வழியாகிற்று வெளி
நடக்க நடக்க
நீண்ட வெறுமையில்
மறுதிசை திரும்பின
என் பாதங்கள்
அந்த மீள் கணத்தின்
ஆரம்பத்தில
நடந்த வழி
வெளியாயிருந்தது
புதிய வெளியொன்று
வழியாகியிருந்தது
எனின் ...
வெளி எது?
வழி எது? மிகவும் எளிமையாக பல உருவங்களை காட்சிப்படுத்தகிறது.
இக் கவிதை பிரெஞ்சுக் கவிஞர் ஜக்பிறெவெ (Jacques Prevert) தினமும் நடக்கும் செயல்களை அற்புதமாக வெளிப்படுத்துவார். மொழியை மக்கள் உருமாற்றம் செய்கிறார்கள் அறிஞர்கள் அவற்றிற்கு கலைச்சொற்களைக் கண்டு:பிடிப்பார்கள். சில சமயங்களில பயனள்ளவையாக இருக்கும் ஒரு பாம்பாக இருந்தாலும் அது உயிருள்ளiவாயாக இருக்கிறதே அதுதான் கவிதை என்பார். (கவிஞர் ஆதவன் அவர்களும் அவருடைய கவிதைகளை மொழிமாற்றம் செய்ததாக அறிந்து மகிழ்ந்தேன்;)
சாரங்காவின் அன்னை பற்றிய அருமையான கவிதை:
அன்னையை மறப்பேனோ? மறந்தால் அருந்தமிழை மறப்பேனே
தாய் பிறந்த மண், தந்தை நடந்த மண்,
வாயிலதை தான்போட்ட நாளில் வழித்தெடுத்து
‘ஆயிரந்தான் சொன்னாலும், என்னுடைய ராசாத்தி
தான் நினைச்சதைத் தான் செய்வாள்,
வாவந்து முகங்கழுவு, வெண்பொங்கல் சோறுண்ணு’
என்று சொல்லி
பாயிரம் பாடுமொரு நிதானத்தில் நின்றுகொண்டு,
பாசமுத்தம் தந்தெந்தன் தவறுகளைத் திருத்திடுவாள்:
தாயவள் தன்பேரன்பு, தணியாத நூல்தாகம்,
தேர்ந்த வார்த்தைத் தூய நெறி
துயரினிலே தளராத துணிந்த மனம், பொறுமையெல்லாம்
சோராமல் எந்தனுக்கும் சோதரர்க்கும் தந்து நின்ற
அன்னையை மறப்பேனோ? மறந்தால்
அருந்தமிழை மறப்பேனே
பேசத் தெரியாது, பிரம்பு வரும் என்று வார்த்தை
வீசத் தெரியாது அவள் விழியசைவில் பொருள் இருக்கும்
ஊசிமுனை அளவு உடல்வருத்தம் நாமுற்றால்
உயிர்துடித்து நின்று ஊண் உறக்கம் மறந்து - எம்முகத்தை
வாசித்து வாசித்து அடுக்கடுக்காயப் பணி புரிவாள்...
நான் முதற் கூறியது போன்று சாரங்கா எழுத்துத் துறையில் மிக வீச்சாக எழுதுவார். 2001 ஆம் ஆண்டு இலங்கைக்கு நான் சென்ற வேளை ரூபவாஹகினி தொலைக்காட்சியில் நேர்காணல் செய்திருந்தார்கள். அதில் தந்தையின் துறையில் என்ன செய்கிறீர்கள் என்ற அவர்களின் கேள்வி எனக்குச் சற்றுச் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர்தான் துணிவாக எழுத முயற்சிசெய்தேன். 2005 இல் ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டபோது இங்கு இருப்பவர்கள் அதில் பங்கு பற்றிப் பேசினர். தீபம் தொலைக்காட்சியில் விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் அந்நூலை இலக்கிய நிகழ்ச்சியில் விமர்சனம் செய்தமை எனக்கு பெரிய ஒரு அங்கீகாரத்தை வழங்கியது. அந்த நூல்; அண்மையில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் அதனை ஆய்வுக்கு உட்படுத்தியமையும் எனக்கு உற்சாகம் தந்தது. அதே போன்று சாரங்காவின் ‘கடலினை வரைபவள்’ ஆய்வுக்கு உட்படக்கூடிய கவிதை நூல் என்பதனைக் கூறி வாழ்த்துவதோடு அவருடைய இந்நூலில் பெண்ணியம் அரசியல் மொழி எமது தாய் மண், இருப்பு. புலம், சமூகச் சீhகேடுகள் எனப் பலதையும் சாரங்காவின் கவிதையுள் மிளிர்வதை என்னால் அவதானிக்க முடிகின்றது. கலையும் இலக்கியமும் என்றும் வாழும். எம்மை உருவாக்கும். உலகின் மிகப் பெரிய சாதனை மொழியினூடாக எழுகின்ற எழுத்து. சாரங்காவின் இக்கவிதைகள் என்னை ஒரு ஆசிரியரின் கைகளைப்போன்று அரவணைத்துப் புத்தி புகட்டுவது போல - மிகப் பசுமையாக காட்சிதரும் இந்த இயற்கையைவிரித்துக் காட்வது போல – அன்னையைப் போன்ற கருணையை ஒத்த கைகளாக – தோழமை போன்ற கைகள் என்னை ஆசுவாசுப் படுத்துவதுபோல – ஒரு குழந்தையைப்போல ஏதோ கைகளை அசைப்பதுபோல – காதலைப் போன்று அரவணைத்துப் பேசும் கைகளாக – கண்ணீரைத் துடைக்கும் கைகளாக விதம்விதமான கைகளாக அக்கவிதைகளை என்னால் ரசிக்க முடிந்தது
சாரங்காவின் இத்தகைய வீறு கொண்ட சொற்கள் போன்று -சொற்களால் மகிழ்வோம். நிலையில்லாத வாழ்வில் இத்தகைய இலக்கியங்கள் நிலைக்கும். இதனை எல்லோரும் வேண்டி வாசிக்க வேண்டும் என்று கூறி வாசிப்பு – ஒரு புதிய பாதையை – புதிய சிந்தனையை – பக்கத்தில் இருக்கும் மனிதர்கள் எங்களைப்போல்தான் என்று உணர்த்தும் - உணர்த்தவேண்டும் என்று கூறி நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே என்று ஐன்ஸ்டீன் கூறுகின்றார். இன்றைய இந்த புத்தகக் காட்சியில் இந்நிகழ்வு இடம்பெறுவது மிகச் சிறப்பான விடயம்.
* - சாரங்காவின் ‘கடலினை வரைபவள்’ கவிதை நூல் வெளியீடு லண்டன் தமிழ் சென்ரரில் பௌசர் அவர்களின் புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றவேளை நான் ஆற்றிய உரை. -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.