9
“நல்ல கலை ‘ இயற்கையின் பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கே’ வாசகனை கொண்டு சேர்த்துவிடும் என்று போதிப்பார் அவர். (பக்கம்:100:நவீனத்துவத்தின் முகங்கள்) மேலும் கூறுவார்: “நல்ல படைப்பு நாம் அறியாத பல நூறு ஆழ்மன சக்திகள் திரண்டு உருவான வடிவம்” என. (அதே) அதாவது, அவரது பார்வையில் ஒரு புறம் படைப்பாளி. மறுபுறம் வாசகன். அதாவது, வாசகனை, “பிரபஞ்ச பேரியக்க வாசலுக்கு” இட்டுச் செல்லும் படைப்புகள் உண்டு. இவற்றை உருவாக்குவது படைப்பாளியின் “ஆழ்மனசக்தி”. மேலும், இப்படி ‘பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கு’ இட்டுச் செல்லும் ஆற்றலை உருவாக்கும், ‘ஆழ்மனசக்திகளின்’ குணாம்சம் குறித்தும் ஜெயமோகன் விளக்கம் கூறத் தவறவில்லை.
“ஒரு எறும்புப் புற்று என்பது பல்லாயிரம் எறும்புகளின் தூல வடிவம். அவ்எறும்புகளின் ஊடாக, கோடானு கோடி வருடங்களாக இயற்கை உருவாக்கிய அமைப்பு அது. இலக்கியப் படைப்பும் அப்படித்தான்.” (அதே)
அதாவது, மேற்படி கூற்றின் பிரகாரம் பார்ப்போமானால், எறும்பு புற்று கட்டுவதும், குரங்கு மாம்பழம் சாப்பிடுவதும், புதுமைபித்தன் கபாடபுரம் எழுதுவதும் - கோடானு கோடி வருடங்களின் சமாச்சாரங்கள் - அதாவது ஆழ்மன விளையாட்டுகள் என்றாகிறது. வெறும், எறும்புகளுக்கே, கோடானு கோடி வருடங்கள் என்றால், கபாடபுரம் எழுதிய, புதுமைபித்தனின் ஆழ்மனம் கூட,அதாவது அதை விட,கோடானு கோடி வருடங்களில் இருந்தே, அதாவது குரங்கு மனிதனாய் ஆன காலத்தில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும். அதனாலோ என்னவோ,‘நம்மவர்களுக்கு, குரங்குகளில் முதல் குரங்கும் தமிழ் குரங்குதான் என்று கூறினாலே பிடிக்கும்’ என்று போகிற போக்கில் புதுமைபித்தன் குரங்குகளை இழுத்துக் கூறுவதும் இந்தக் குரங்கு சார்ந்த ‘ஆழ்மன’ விளையாட்டுகளின் கீற்றோ என்பதுவும் புரியவில்லை.
மொத்தத்தில், நாவலில் வரும் மரீனா – கிளிம் சார்ந்த ஆவி இறங்கல்களை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது எமது இலக்கியத்தில் வலுவாக முன்னெடுக்கப்படும் மரபுகள் - தொன்மங்கள் - ஆழ்மன சக்திகள் - நனவிலி மனம் - நனவிலி மொழி - இவற்றை எடுத்துக் கொண்டாலும் சரி - இவை ஆளாளுக்கு ஆங்காங்கே சற்று வித்தியாசப்பட்டிருந்தாலும் அடிப்படையில் ஒன்றாகவே ஒலிக்கின்றது – அதிலும் 1916 இலிருந்து யுங்கின் மூலமாக, தெளிவாக.