கிளிம்மின் சரித்திரம் - கார்க்கியின் இறுதி நூல் ஓர் அறிமுகம்! (1) - ஜோதிகுமார் -
மக்ஸிம் கார்க்கியின் இறுதி நூலான, ‘கிளிம்மின் சரித்திரம்’ எனும் இப்பிரமாண்டமான பேரிலக்கியத்தின் நான்கு தொகுதிகளில், முதல் தொகுதி 1927 இல் வெளிவந்துள்ளது. இரண்டாம் தொகுதி 1928 இலும் மூன்றாம் தொகுதி 1930 இலும் 4ம் தொகுதி 1936 இற்கு பிறகேயும் அச்சேற்றப்பட்டுள்ளது. தன் வாழ்க்கையின் மொத்த சாரத்தை பிழிந்து தரும் நூலாகவும், தான் வாழ்வில் சந்தித்திருக்ககூடிய அனைத்து சவால்களிலும் ஆகப் பெரியதும் பலமிக்கதுமான சவால் என்றும், தன் வாழ்வின் இறுதிச் சாசனம் எனவும் கார்க்கியால் வரையறுக்கப்பட்ட இந்நூல் ஓர் 40 வருட கால ரஷ்ய வாழ்வின் குறுக்கு வெட்டு முகத்தையும், அதன் உக்கிரமான பல்வேறு திருப்பு முனைகளையும், அவற்றை ஓர் ‘நவ’ மனிதன் முகங் கொடுக்கும் விதத்தையும், அன்னியப்பட்ட, பண்பாட்டுக்கு எதிரான ஆனால் மேலோட்டமான பண்பாடு மூலாம் பூசப்பட்ட அவனது அந்தரங்க நகர்வுகளையும் நூல் இனங்காட்ட முனைகின்றது.
மக்கள் சாரிகள் உருவாக்கித் தந்த பிரமித்தியூஸ் போன்ற கட்டறுந்த வரலாற்று கட்டமைப்புகளின் பின், அத்தகைய ஒரு பாத்திரம் நவீன இலக்கியத்திலும் சாத்தியப்படுமா என்பது கார்க்கியின் வாழ்நாள் கேள்வியாக இருந்து வந்துள்ளது. தன் இறுதி காலத்தில் இவ்வரலாற்று பணியை, செய்து முடிக்க வேண்டிய பொறுப்பை வரலாறானது தன்மீதே சுமத்தியுள்ளது என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்கின்றார். பெரிதும் தயக்கத்துடனேயே தன் பேனையை தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர் ஆளாவதை, நூல் குறித்த அவரது குறிப்புகள் தெளிவுற வெளிக்கொணர்கின்றன. ஒரு கட்டத்தில், இப்பொழுது நான் பயப்படுவதெல்லாம் ஒரே ஒரு விடயத்தை பற்றி மாத்திரமே. அதாவது, நான் இந்நூலை எழுதி முடிப்பதற்கு முன் மரணம் என்னை அணுகிவிடுமோ என்ற ஒரே அச்சம் தான். இந்நூலை மனுகுலத்தின் இன்னுமொரு சாதனை என நாம் வகைப்படுத்தலாம் - இதில் உள்ளடங்கும் சாரத்தின் பல்வேறு பரிமாணங்களை சரியாக நாம் கையேந்த முடியுமானால்.