தேடகம், காலம் & பதிவுகள்.காம் ஏற்பாட்டில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பும், உரையாடலும்! - வ.ந.கி -
இன்று மாலை 3600 KIngston Road இல் அமைந்துள்ள ஸ்கார்பரோ கிராமச் சமூக நிலையத்தில் தேடகம், காலம் மற்றும் பதிவுகள்.காம் ஒன்றிணைந்து நடத்திய எழுத்தாளர்கள் முருகபூபதி மற்றும் சாம்ராஜுடனான இலக்கியச் சந்திப்பு அமைதியாக ஆனால் காத்திரமானதாக நடந்து முடிந்தது. நிகழ்வினை எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தலைமையேற்றுச் சிறப்பாக நெறிப்படுத்தினார்.
ஆரம்பத்தில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுத்தாளர் முருகபூபதி பற்றி நல்லதோர் அறிமுகத்தைச் செய்தார். ஆரம்பத்தில் மல்லிகையில் முருகபூபதியின் முதலாவது சிறுகதை வெளியானதையும், தொடர்ந்து வெளியான இரண்டாவது கதை தான் நடத்திய 'பூரணி'சஞ்சிகையில் வெளியானதையும் நினைவு கூர்ந்தார். முருகபூபதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கொழும்புக் கிளையில் முக்கிய பங்கு வகித்ததைக் குறிப்பிட்ட என்.கே.மகாலிங்கம் அவர்கள் ஆனால் முருகபூபதியின் கதைகளில் ஏனைய முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களின் கதைகளில் உள்ளதைப்போன்ற பிரச்சாரத்தொனி இருந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டினார். கூடவே முதல் கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் ( 1976 இலும் ) முதல் நாவல் பறவைகள் ( 2003 இலும்) சாகித்திய விருது பெற்றதையும் நினைவு கூர்ந்தார். இவ்விதம் ஆரம்பத்தில் புனைவிலக்கியத்தில் கால் பதித்த முருகபூபதி பின்னர் ஊடகத்துறைக்குள் மூழ்கி அபுனைவிலக்கியத்தில் மூழ்கி விட்டார் என்னும் கருத்துப்படத் தன் உரையினையைத் தொடர்ந்தார்.