1997இல் வெளிவந்த அருந்ததி ராயின் The God of Small Things நாவலுக்கு இருபது வருஷங்களுக்குப் பின்னால் அவரது இரண்டாவது நாவலான The Ministry of Utmost Happiness 2017இல் வெளிவந்தது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘பெருமகிழ்வின் பேரவை’ என்ற மகுடத்துடன் காலச்சுவடு பதிப்பாக ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் பெப். 2021இல் பிரசுரமானது. இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே இதை வாசித்திருந்தபோதும், ஏதோ சில தெளிவுகளுக்காக திரும்ப ‘சின்ன விஷயங்களின் கடவு’ளை வாசித்து, மறுபடி ‘பெருமகிழ்வின் பேரவை’க்குள் புகுந்து, மீண்ட பின்னாலும், நாவலின் ஆதாரக் கருத்துநிலை அவ்வளவு அச்சொட்டாய் பிடிபட்டிருக்கவில்லை. அதற்கான சிந்திப்பில் ஒரு நீண்ட காத்திருப்பு தொடர, ஒருபோது மங்கலாகவெனினும் கிடைத்த ஒரு வெளிப்பைத் தொடர்ந்து நூல்பற்றிய மதிப்பீட்டை இங்கு பதிவாக்க விழைகிறேன்.
தமிழ் மூல நாவல்களுக்குப்போல் தமிழில் மொழிபெயர்ப்பாகி வரும் நாவல்களுக்கு வரவேற்பிருந்தாலும் திறனாய்வு ரீதியிலானவோ ரசனை ரீதியிலானவோ விமர்சனங்களோ மதிப்பீடுகளோ குறைவாக வருவதையே என் அவதானித்திருக்கிறேன். தமிழவனின் தமிழ் மூல நாவலான ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’போல, மார்க்வெய்ஸின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவலான ‘தனிமையின் நூற்றாண்டு’ விமர்சன ரீதியாக எதிர்கொள்ளப்படவில்லை எனவே கருதத் தோன்றுகிறது. இது காரணமாகவே வழுக்குப் பாறையில் நடக்கும் வெகு அவதானம் இம் மதிப்பீட்டை முன்வைக்கையில் என்னிடத்தில் இருந்தது.
புனைவுகளதும் அபுனைவுகளதும் மொழிபெயர்ப்பு நூல்கள் அணுகப்படவேண்டிய முறைகள் வித்தியாசமானவை. அவைபோல அவற்றின் மொழிபெயர்ப்பு விதங்களும் கவனம் கொள்ளப்படவேண்டிய முக்கியமான அம்சங்கள் கொண்டவை. மதிப்பீட்டு ரீதியாக ஒரு மொழிபெயர்ப்புப் பிரதியை வெகு அவதானத்துடன் வாசகர் அணுகவேண்டியது முக்கியம். ஏற்கனவே ஜோன் பன்விலின் ‘கடல்’, ஒரான் பாமுக்கின் ‘பனி’ மற்றும் அவருடைய ‘இஸ்தான்ஃபுல்’ ஆகிய நூல்களின் சிறந்த மொழிபெயர்ப்புக்களைத் தந்த ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பின் வீறு இந்த நாவலிலும் உள்ளது. ‘கடல்’ நாவலின் மிக அற்புதமான மொழியினைக் கையாண்டதில் அவரது மொழிபெயர்ப்பில் மிகுந்த மரியாதையுள்ள என்னை ‘பெருமகிழ்வின் பேரவை’ அதைத் தக்கவைத்துக்கொள்ளவே செய்தது. படைப்பின் உயிர்நிலையை அவர் தவறவிட்டுவிடவில்லை. ஒரு தமிழ் வாசகனாய் அப் பிரதி தந்திருக்கக்கூடிய இன்பத்தில், சில இடர்ப்பாடுகள் சாரு நிவேதிதாபோன்ற சில விமர்சகர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருப்பினும், உணர்வோட்டத்துடன் இடறலற்ற கருத்தோட்டத்தைக் காண முடிந்திருந்ததில், அந்த வாசிப்பின் தளத்திலிருந்தே நாவலின் பெறுமானத்தை மட்டுக்கட்ட என்னால் முடிந்திருந்தது. தமிழ் -ஆங்கில பிரதிகளின் ஒப்பீடு, வாசகனாய் எனக்கு அவசியமில்லாதது. ‘பெருமகிழ்வின் பேரவை’ எங்கேயும் மொழிப் பாவனையில், அர்த்தங்களை நயம்பட விரித்துவந்து வரிகளாய் நிறுத்திய மாதிரியில் என் வாசிப்பு இடறல் அடையாதவரை மொழிபெயர்ப்பில் எனக்கு ஐயம் எழுந்துவிடாது. இதுதான் ஜி.குப்புசாமியானாலும், அரவிந்தனானாலும், ஆர்.சிவகுமாரானாலும், சாரு நிவேதிதாவானாலும், மணி வேலுப்பிள்ளையானாலும், என்.கே.மகாலிங்கமானாலும் என் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டிலிருந்து பிரதியை நான் விமர்சனமும் செய்வேன், மொழிபெயர்ப்பாளரை நம்புவது காரணமாக. நாவலோ சிறுகதையோ மொழிபெயர்ப்பாளரை வாசிப்பின் இடையிலே நினைக்கவைக்காத மொழிபெயர்ப்பை நல்லதெனக் கொள்ள எனக்குத் தயக்கமில்லை. பிரதி வாசிப்பின் பின்னால் மொழிபெயர்பாளர் குறிப்பை மறுபடி வாசிக்க உந்துதல் ஏற்பட்டால் அது இன்னுமே சிறப்பான மொழிபெயர்ப்பெனக் கொள்வேன். இவை விதிகளல்ல, என்னுடைய வழி.
அவ்வாறு இல்லையென்றால் கப்ரியேல் கார்ஸியா மார்க்வெய்ஸ்போன்றோரின் ஸ்பானியமொழி மூல நாவல்களான ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ போன்றவை தமிழில் வரும்போது என் ஐயுறவுகளை எங்கே போய், எப்படித் தீர்த்துக்கொள்வதாம்? வாசிப்பின் அலகுகளால் ஒரு மொழிபெயர்ப்புப் பிரதியின் மொழியாக்கத் தாரதம்மியத்தை தீர்மானிக்க முடியுமென்பது ஒரு வாசகனாய் நிமிர்ந்து நின்று சொல்லக்கூடிய அபிப்பிராயமாகவே எனக்குப் படுகிறது.
பெருமகிழ்வின் பேரவை’ சிலவிடங்களில் கவித்துவமாய் இருந்தது. ஆயின் இச் சிறப்பின் மூலவர் பிரதிகாரரா, மொழிபெயர்ப்பாளரா என்கிற வினா எழுவது தவிர்க்கமுடியாதது. அப்போது அதன் விடையை தயக்கமின்றி பிரதிகாரரது எனச் சொல்லிவிடலாம். நெய்க்குத் தொன்னையும், தொன்னைக்கு நெய்யும் ஆதாரமாவதுபோலத்தான் இந்த விவகாரம். மொழிபெயர்ப்பென்பது ஒரு மறுபடைப்பு என்பதையும் இங்கே சொல்லிக்கொள்ளவேண்டும். அச்சு அசலாக மூலப்பிரதியையொட்டி மொழிபெயர்ப்பு இருக்கத் தேவையில்லை என்பார், உலகத் தரம் வாய்ந்த மரியோ வர்காஸ் யோசா மற்றும் மார்க்வெய்ஸின் இஸ்பானிய மொழி நாவல்களை ஆங்கிலத்தில் தந்த எடித் கிராஸ்மன். அதையும் இந்த இடத்தில் ஞாபகங்கொள்வது உகந்தது.
‘பெருமகிழ்வின் பேரவை’ நாவலின் கதைப் போக்கு பொதுவாக எவ்வாறாக இருக்கிறது? நாவல் ஒரு கதையைக் கொண்டிருக்கவில்லை. தொடர்புறும், முக்கியமாக அஞ்சும், எஸ்.திலோத்தமா, நாகராஜ ஹரிஹரா, மூஸா யெஸ்வி, சதாம் ஆகிய பாத்திரங்களின் பல கதைகளால், உட்பிரதியாக எதுவும் அமையவில்லை என்றாலும், பன்மைத் தன்மையாக விரிந்திருக்கிறது. இப் பாத்திரங்களினூடாகவும் ஓடியிருப்பது இரண்டு பிரதான கதைகள். ஒரு பாலினர், திருடர்கள், வக்கற்றவர்கள், சுதந்திர மேதிகள், பத்திரிகையாளர்கள், தீவிரவாதிகள், புரட்சியாளர்களென பல்வேறு பாத்திரங்கள் தம் போக்கில் தம் கதையை நகர்த்துவனவாகவே உள்ளன. ஆனால் குல்ரேஸ் அப்ரூ போன்ற மனத்திலகலாத பாத்திரங்களும், இராணுவ மனநிலைகொண்ட மேஜர் அம்ரிக் சிங் பாத்ததிரமும் கதைக் களனின், அரசியலின் கொடூர நகங்களை வெளிப்படுத்தவே நாவலில் உதவிகரமாக இருந்திருக்கின்றன. உஸ்தாத் குல்சும் பீ, சயீதா, குழந்தை மிஸ் ஜெபீன், அவளது அம்மா ஆரிஃபா போன்ற கதா மாந்தர்கள் நாவல் முடிந்த பின்னாலும் வாசக மனத்தில் உயிர்கொண்டு அலைவதை பாத்திர வார்ப்பின் விஷேசமாகச் சொல்லவேண்டும். பாத்திரங்கள் சிலவற்றை அவர்களது உரையாடல் உயிர்ப்பித்ததென்றால், சிலவற்றுக்கு அவர்களின் இயங்குமுறையை, உணர்நிலையை எடுத்துரைத்த வார்த்தைகள் உயிரேற்றினவெனச் சொல்வதில் தப்பில்லை.
பெண்ணுறுப்பின் குழாய்கள் திறக்காமல் அடையாளம் மட்டும் கொண்டிருந்த அஃப்தாப் என்ற ஆண் சிசுவை, தாய் ஜஹனாரா பேகத்தினதும் தந்தை முலாகத் அலியினதும் வைத்திய ரீதியிலான, மத நம்பிக்கையிலான பல்வேறு சிகிச்சை முயற்சிகளும் ஆணாக உருவாக்கவேயில்லை. நாளடைவில் பெண்ணின் குணாம்ச வெளிப்பாட்டில் சுயஈர்ப்பும் சேர ஹிஜ்ராவாகி அஞ்சும் என்ற பெயருடன் க்வாப்காவில் சேர்ந்து ‘அவள்’ ஆகிவிடுகிறான். தில்லியை மையங்கொண்டெழும் நாவலின் கதையெழுச்சியில் மாற்றுப்பாலினரான இவ்வகை ஹிஜ்ராக்களின் வாழ்நிலை, மனவெழுச்சிகள் யாவும் பாலின தொழில்ரீதியாக சமூக அந்தஸ்திழந்திருந்தவர்களின் துயர வாழ்வை, நாவலின் நோக்கம் அதுவாகவே இல்லாதபோதும், வெகுசிறப்பாகவே காட்டிவிடுகிறது.
தான் அநாதையாய்க் கண்டெடுத்து வளர்க்கும் ஜைனாப் என்ற குழந்தையின் நேர்த்திக்கடனிறுப்புக்காக அஞ்சும் அஜ்மீரிலுள்ள ஷரீஃபுக்கு சென்று மீளும்போதுதான் ‘வரலாற்றுப் புகழ்பெற்ற’ குஜராத் கலவரம் நிகழ்கிறது. நாவல் கலவரத்தின் நடுக்குறுத்தும் கொடுமைகளை எதார்த்தமாய்ச் சித்தரிக்கிறது. கொடுமைகளையும் கலாநேர்த்தியோடு சொல்ல முடிந்திருப்பது விந்தை. ஆனால் அஞ்சுமின் வாழ்வில் குஜராத் கலவர நிகழ்வுகளை விபரித்திருக்கத் தேவையில்லையெனவே படுகிறது. அது அஞ்சும் கதாபாத்திரத்தில் எந்த வளர்ச்சியையும் மாற்றத்தையும் காட்டுவதில்லை. மனித அவயவத்தில் ஏற்படும் வீக்கம்போல நாவலில் அது தென்படுகிறது.
அதிலிருந்து தொடரும் விபரிப்புகளும் சம்பவங்களும் மறைமுகமாகவெனினும் வாழும் அரசியல்வாதிகளின் ஆளுமைகளின்மீது நேரடித் தாக்குதல்போன்ற பாதிப்பைச் செய்கின்றன. ‘குஜராத் லல்லா’வெனக் குறிப்பிடப்படுவது அக்காலகட்டத்திய குஜராத் முதலமைச்சரென்பதும், ஊழலுக்கெதிராக தேசமளாவிய போரினைத் தொடுத்தவர் யாரென்பதும் அந்நிய தேச வாசகர்களுக்கும் விளங்கவே செய்கிறது. அவரது போராட்டம் இறுதியில் பிசுபிசுத்துப் போனதேன் என்பதற்கான விளக்கத்தை இப் பகுதியில் நாவல் தெளிவாகவே முன்வைக்கிறது. இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளின் விபரிப்பு, மனித அவயவத்தில் வளர்ந்து வேண்டாத கழலையாக மாறிப்போனாலும், இவையே நாவலின் வகைமையை துல்லியமாக அடையாளம் காட்டிவிடுகின்றன.
அஞ்சும் க்வாப்காவைவிட்டு வெளியேறும் ஒரு தருணம் வருகிறது. வளர்ப்புக் குழந்தை ஜைனாப்பையும் வேறொருத்திக்கு இழந்துவிட்டு தனியே சுமார் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்த அந்த இருப்பிடத்தைவிட்டு வெளியேறுகிறாள். அவள் குஜராத்திலிருந்து திரும்பிய பிறகு மனோரீதியாக பாதிக்கப்பட்டிருந்தது தெளிவாகவே நாவலில் காட்டப்படுகிறது. ஆனால் மனோதத்துவ ரீதியில் அவளது நிலையை அணுக படைப்பாளி தவறிவிடுகிறார்போல் தென்படுகிறது. திலோவின் மனநிலை இழப்புக்குக் காரணமானதும், பின்னால் தொடர்வதுமான சம்பவங்கள் மனநலரீதியாக கவனம்பெறுமளவு ஆழ்ந்து பார்க்கப்படவில்லை என்பதையும் இடத்தின் பொருத்தம் கருதி இங்கே குறிப்பிடுவது நல்லது. நாவலில் ஆழமாய்ச் சென்று அலசியிருக்கப்படவேண்டிய பகுதிகள் இவை.
அஞ்சும் க்வாப்காவிலிருந்து வெளியேறிய பின்னால் தில்லி அரச மருத்துவமனைக்குப் பின்புறத்திலுள்ள மயானம் அடைக்கலம் கொடுக்கிறது. அங்கிருந்து தொடங்கும் அஞ்சுமின் இரண்டாம் கட்ட வாழ்க்கையும் ‘கலகலப்’பாகத் தொடரவே செய்கிறது சதாமின் துணையுடன். ஆயினும் முதல் அத்தியாயத்துடன் களத்திலிருந்து மறைந்துபோகும் அஞ்சும், கடைசி அத்தியாயமான ‘பெருமகிழ்வின் பேரவை’யில்தான் மறுபடி முகங்காட்டுகிறாள். ஆனாலும், ஆழமான பதிவெதனையும் அங்கே நிகழ்த்துவதில்லை.
மேலும் மருத்துவமனையின் பிணவறையை ஒட்டியிருந்ததாலேயே கவனிப்பாரற்றுக் கிடந்த அசிங்கமான அந்த மயானமே ஒரு பாத்திரமாக மாறிவிட்ட பிரமையை இந்த அத்தியாயத்திலும் கடைசி அத்தியாயத்திலும் வரும் படைப்பாளியின் சாதுர்யமான விவரிப்புக்கள் வாசக மனத்தில் ஏற்படுத்தியே விடுகின்றன. அது வேறோர் உலகமாக மாறிப்போகிறது. ஆயினும் இந்த உலகத்துள்ளிருக்கும் இன்னோர் உலகமாக. ஒரு மயானத்தை கருத்துக்களினதும் வாழ்நிலையதும் மோதுகை கொண்ட களமாக வேறெந்த நாவலாவது இவ்வளவு கச்சிதமாக புனைவும் யதார்தமுமாய்ச் சித்திரித்துள்ளதா தெரியவில்லை.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அழுக்கும், அவதிகளும், அகதிகளின் அவலங்களும் நிறைந்த தில்லியில் அஞ்சுமின் நிகழ் சரித்திரம் பெரும்பாலும் முடிவுற, நாகா, மூஸா, திலோ ஆகியோரின் கதை வேறொரு தளத்தில் விரிகிறது. ஆரம்பத்தில் அது தில்லியாகவும், பின்னால் துக்க சரிதம்கொண்ட காஷ்மீராகவும் தொடர்ந்து தில்லியாக மாறி நாவல் நிறைவுறுகிறது. இடையில் கழலைகள்போல் டாக்டர் ஆஸாத் பார்தியாபோன்ற பாத்திரங்களின் கதையாடல்கள். நாவலுக்கு அவை முட்டுக்கொடுக்கின்றன என்பதே, நாவல் ஆங்காங்கே பலஹீனப்பட்டுள்ளதென்பதன் உறுதிப்பாடு ஆகிவிடுகிறது.
இதுவரையான பாத்திரங்களின் முக்கியத்துவமானது அறிவார்த்தமான, கவிதை மனோலயத்துடன் உரையாடுவதான தம் வாழ்வியலில் அவர்கள் கொள்ளும் பேருவகையைப் புலப்படுத்துகிறது. திலோ, நாகா, மூஸா ஆகிய கல்லூரிக் கல்வியாளர்களிடம் மட்டுமில்லை,, தந்தைக்குப் பிரியமானதாகையாலேயே அவர் சேகரித்த கவிதைகளை மயானத்தில் வைத்தும் பாதுகாக்குமளவு முறையான கல்விப் பின்புலமற்ற அஞ்சுமிடத்தில்கூட, கவிதையின் மகத்துவம் உணரப்பட்டுள்ளதாய்க் காட்டப்படுகிறது. ஆங்கில, உருதுக் கவிதைகள் ஆங்காங்கே சில வரிகளிலாயினும் சுட்டிக்காட்டப்படுகின்றன. இடம்பெறும் கவிதை வரிகள் முண்டிக்கொண்டு நிற்கவில்லை. அது வாசிப்பின் பேரின்பத்தை வாசகருக்கு அளிக்கிறதென்பது நாவலின் சிறப்பான அம்சங்களில் ஒன்று.
நாகா, மூஸா, திலோ மற்றும் பிப்லப் தாஸ் குப்தா ஆகிய ஏற்கனவே புதுதில்லியில் கல்லூரிக் காலத்திலிருந்து நண்பர்களாயிருந்தவர்களின் கதை ஆரம்பித்திருந்தாலும், காஷ்மிரில் தொடர்கையில்தான் நாவல் உச்சபட்ச உரைநடையின் வீறினைக்கொண்டு விளங்குகிறது. காஷ்மீரில் அரச படைகளினதும், தீவிரவாதிகளதும், புரட்சியாளர்களதும் செயற்பாடுகளால் வன்முறையின் ஆகக்கூடிய அவலங்கள் பொதுமக்களுக்கு விளைவதையும், அதற்குப் பழக்கமாகிப்போன அவர்களது அன்றாட வாழ்வையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது நாவல். கழலைகள் அதிகமில்லாத பகுதியாகவும் அது ஆகிநிற்கிறது. அதனாலேயே நாவலின் இப்பகுதியில் வரும் ‘பாடுபொருள்’ பொதுமக்களின் சொல்லொணாத் துயராக அமைந்துபோகிறது.
வாழ்வியலின் ஒருவகையான அதீத விடுதலையும் இங்கேதான் நிதர்சனமாய்க் காட்டப்படுகிறது. மணமுறிவுபெற்ற திலோ தன் முன்னாள் காதலன் மூஸாவை காஷ்மீரில் சந்திப்பதும், கவிதைமயமான உரையாடலும், கொள்ளும் உடலார்த்த உறவுகளும் கட்டறுத்த சுதந்திரத்தின் அடையாளங்கள்.
அண்மையில் நான் வாசித்த நாவல்களில் சிறப்பான பிரதியாய் ‘பெருமகிழ்வின் பேரவை’ இருக்கிறதென்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆயினும் நாவலில் உச்சபட்ச அடைதற் சாத்தியங்களும் பல இருந்தனவென்பதை நான் சொல்லவும் வேண்டும். கூடவே, இந்த இச்சாபூர்வமான விடுதலைவேட்கை வியந்தோதப்படக்கூடியதா என்பதிலும் ஒரு கேள்வியை முன்வைக்க முடியும். சமூக வாழ்நிலையின் விடுதலையைக் கோருதல், இவ்வாறான மானுட உணர்வின் விடுதலைக் குரல்களைக் கண்டு சாமான்ய வாசகர் தடுமாறுவது இதனால் நிகழ வாய்ப்புண்டு. சாதுர்யமான வாசகர் வாழ்வின் விடுதலை வெற்றியை முதலிலும், உணர்வின் விடுதலையைப் பின்னருமாய் விரும்புவர். இதிலிருந்து புதிதாய் ஏதேனும் தத்துவம் கருக்கொள்ளல் சாத்தியமா?
அரசியல் நிலைமைகளின் சமகாலக் கோலம், தார்மீக எண்ணமும் எழுச்சியுமுடையவரிடத்தில் ஒரு கோபத்தை எங்கேயும் விளைக்கவே செய்கிறது. அது அருந்ததி ராயிடத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நடையும் மொழியும் மிகச் சிறந்த கருவிகளாக அமைந்திருக்கின்றன. ‘சின்ன விஷயங்களின் கடவு’ளின் மொழி ஒருவகையான மலையாள ஆங்கிலமெனச் சொல்லத்தக்கதாயிருக்க, ‘பெருமகிழ்வின் பேரவை’ இந்திய ஆங்கிலத்தில் அமைந்திருந்ததாய்ச் சொல்லமுடியும். முந்திய நாவலின் மலையாள ஆங்கிலத்தின் சுவை ஒன்றாகயிருக்க, பிந்திய நாவலின் இந்திய ஆங்கிலம் வேறொன்றாயிருக்கவே முடியும். எனினும் அதில் ஒரு முதிர்ச்சியின் வீறு இருக்கிறதென்பதும் மெய்யே.
தொடர்ந்துவரும் சொல்லடுக்குகள், உதாரணமாக, ‘அவளுக்கு நன்றாகவே தெரியுமென்று அவளுக்கு நன்றாகவே தெரியுமென்று அவளுக்கு நன்றாகவே தெரியும்’ (பக்: 74) என்றும், ‘வீடற்ற மனிதர்களின் தூங்கும் உடல்கள் அவர்களது உயர்ந்த குறுகலான நடைபாதையின் நெடுகிலும் தலைமுதல் கால்வரை, தலைமுதல் கால்வரை, தலைமுதல் கால்வரை வரிசையிட்டுக் கண்ணுக்கெட்டியவரை தெரிந்து நீண்டிருந்தன’ (பக்: 106) என்றும் வரும் இடங்கள், செய்யுள் மரபின் ஆரம்பகாலத்தை நினைவூட்டுவதாய் நீள்கையில், அடைப்புக்குறிக்குள் சொற்களாகவும், விளக்கங்களாகவும் படைப்பாளி இடை புகுதல் வாசிப்பின் வேகத் தடைகளாக பல இடங்களில் அமைந்துவிடுவதை கட்டாயம் குறிப்பிடவேண்டும். சில இடங்களில் அடைப்புக் குறிகளின் அவதானமின்றியே கடந்துபோக முடிகின்றதானாலும், சில அடைப்புக் குறிகள் தடுக்கிநிற்க வைக்கின்றன. இது அண்மைக்கால பிரதிகளில் இல்லாதது. சுமார் நானூற்று ஐம்பது பக்க நூலில், சுமார் ஆயிரமளவான அடைப்புக் குறிகள். வேறுவேறு பேருக்கு எப்படியோ, எனக்கு ரசனையில் இடறலில்லாமல் முன்னேற முடியாதிருந்தது.
‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நாவலுக்கும் ‘பெருமகிழ்வின் பேரவை’ நாவலுக்கும் இடைப்பட்ட இருபது ஆண்டுக் காலத்தில் அருந்ததி ராயின் சமூகம், அரசியல் சார்ந்த பல அபுனைவு நூல்கள் வெளிவந்தன. அவற்றுள் 2001இல் வெளிவந்த The Algebra of Infinite Justice நூலையும், 2011இல் வெளிவந்த Walking with the Comrades நூலையும் மிகுந்த கூர்மையுடன் எழுதப்பட்ட அரசியல் தொகுப்பு நூல்களெனக் கொள்ளமுடியும். அருந்ததி ராயின் அந்த அரசியலின் தொடர்ச்சியாக நீண்டிருக்கிறது ‘பெருமகிழ்வின் பேரவை’. ஒரு கோபக்கார படைப்பாளியாய் அவர் இந்த நாவலிலே தன்னை அடையாளப்படுத்துகிறார்.
‘தகுந்த நேரம் வருவதற்காகக் காத்திருந்த காவிக்கிளிகள் கட்டவிழ்ந்து பாயத்தொடங்கின. பல்கலைக் கழக வளாகங்களிலும் நீதிமன்றங்களிலும் புகுந்தனர். இசை நிகழ்ச்சிகளில் குறுக்கிட்டனர். திரையரங்குகளில் புகுந்து நாசம் விளைத்தனர். புத்தகங்களை எரித்தனர். போதனாமுறைபற்றிய குழுவொன்றைக் காவிக்கிளிகள் அமைத்து, வரலாற்றைப் புராணங்களாகவும், புராணங்களை வரலாறாகவும் மாற்றும் செயல்திட்டங்களை வகுத்தனர்’ (பக்:401) எனவும், ‘பசு தேசியச் சின்னமாக மாறியது. பசுவின் கோமியம் (சிறுநீர்) அரசு விளம்பரங்கள்மூலம் (பானமாகவும், துப்புரவு மருந்தாகவும்) பரிந்துரைக்கப்பட்டது. லல்லாவின் கோட்டையாகத் திகழும் பகுதிகளிலிருந்து மாட்டிறைச்சி உண்பவர்களையும், பசுக்களைக் கொல்பவர்களையும் பொது இடங்களில் நிறுத்திக் கசையால் அடிக்கும் செய்திகளும் சிலநேரங்களில் வெட்டிக் கொலைசெய்யும் செய்திகளும் கசிந்துகொண்டிருந்தன’ (பக்:402) எனவும் நாவலில் வரும் பகுதிகள் அவரது கோபத்தின் திசையை உரைக்கும். அந்தக் கோபம் நியாயமில்லாததெனச் சொல்ல முடியாததே.
இவ்வளவு கோபத்துள்ளும் நாவலில் ஆங்காங்கே தெறிக்கும், ‘அவனை அடக்கம்செய்ய உஸ்மான் அப்துல்லாவின் சமாதியிலிருந்து தொலைவில் இருக்கும்படி மயானத்தின் எதிர்மூலையில் ஓர் இடத்தை ஒதுக்கினார்கள், இறந்தவர்கள் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது என்பதற்காக’ (பக்:322) போன்ற வரிகள் துக்கத்தினுள்ளும் சிரிப்பை வரவழைப்பவை. அத்துடன், ‘காஷ்மீரில் இப்போதெல்லாம் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்பதற்காகவே கொல்லப்படலாம்’ போன்ற வீறார்ந்த வரிகள் ஆங்காங்கே.
தத்துவங்கள் வாழ்க்கையிலிருந்து பிறப்பவை ; பாத்திரங்களின் வாழ்முறையிலிருந்து தத்துவங்களை உருவாக்கிவிட முடியாது. ஆனாலும் அவற்றின் எதிர்ப்புறத்திலிருந்து சூரிய ஒளியாய் ஒரு வட்டத்தைக் காணமுடியும். ‘பெருமகிழ்வின் பேரவை’ காட்டும் ஒளிவட்டத்தின் பின்னாலுள்ளதா அப் பெருந்தத்துவம்?
பிரதியின் மதிப்பீடு சார்ந்து ஒரு விஷயத்தைச் சொல்வதோடு முடித்துக்கொள்ளலாம்.
‘எங்கே போய் நாம் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள முடியும்?’ என்ற வினாவுக்கான விடை, ‘இலக்கியத்திலிருந்தேதான்’ என்பதுவே.
நன்றி: தேவகாந்தனின் 'கதாகாலம்' வலைப்பதிவு.