தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (5): ஆனை பார்த்த அந்தகர்கள்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஐந்து - ஆனை பார்த்த அந்தகர்கள்!
மனோரஞ்சிதம் அவ்வப்போது தமிழ்க் கலை, இலக்கியம் பற்றியும் கருத்துகளை உதிர்ப்பதுண்டு. அவளது கருத்துகள் எப்பொழுதுமே சிந்தனையைத் தூண்டுபவையாக, ஆழமான தர்க்கத்தை வேண்டுபவையாக இருப்பது கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்படுவதுண்டு. இவ்விதமாக அவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில் அவள் ஆழ்ந்த சிந்தனை நிலையினைக் கண்டு "என்ன பலமான சிந்தனை?" என்று கேட்டாள். கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பார்த்து என்னையே பார்த்து நின்றாள்.
"வேறொன்றுமில்லை கண்ணம்மா, எல்லாம் நம் காலத்து இலக்கியவாதிகளைப்பற்றித்தான். ஆளுக்காள் குழுக்களாகப் பிரிந்து நின்று தாமே சரியென்று வாதிட்டுக்குகொண்டிருக்கும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பு வராமல் வேறென்ன வரும். நீயே சொல் கண்ணம்மா."
"இலக்கியமோர் யானை" என்றாள் பதிலுக்கு மனோரஞ்சிதம்.
"யானையா?"
'ஓம். யானைதான்" என்று தீர்மானமாகச் சொன்னாள் மனோரஞ்சிதம் மீண்டும். அவளது அந்த உறுதி அவள் தன் தீர்மானத்தில் மிகவும் தெளிவாகவிருக்கின்றாள் என்பதை நன்கு புலப்படுத்தியது.
"ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான் கண்ணம்மா. இலக்கியத்தில்தான் எத்தனை எத்தனை போக்குகள்."
"கண்ணா, போக்குகள் பல இருப்பது தவறானதொன்றல்ல.அவையெல்லாம் வளர்ச்சியின் அறிகுறிகளே. பிரச்சினை என்னவென்றால்...."
"என்ன பிரச்சினை கண்ணம்மா?"