எஸ் பொன்னுத்துரை ஈழத்து செவ்வியல் எழுத்தர்! - எஸ்.நடேசன் -
‘உங்கள் ஈரல் பல காலம் ஓவர்டைம் செய்த ஈரல்’என்று எஸ்.பொ. மரணிப்பதற்கு சில கிழமைகள் முன்பு அவர் ‘ஈரலில் பிரச்சினை’என்றபோது கூறினேன்.
‘அது சரிதான்’ என்று மெதுவான சிரிப்பு தொலைப்பேசியில் கேட்டது.
‘உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’
‘அதுதான் அநுரா பார்க்கிறான்’
‘அம்மாவாலும் அநுராவாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. எனது மனைவியின் தமையன். சமீபத்தில் சுவாசப் புற்றுநோயால் இறந்தவர் .வாழ்க்கையில் மனிதன் தண்ணியோ சிகரட்டோ வாயில் வைக்காதவர். நோய்கள் எவரையும் விட்டு வைப்பதில்லை’என்றேன்.
‘தமிழ் இலக்கிய தோட்டத்தில் எஸ்.பொ. என்ற பொன்னுத்துரை நீண்டு, பருத்து , அறுபது வருடங்கள் மேல் ஓங்கி வளர்ந்து கிளைவிட்ட வேப்பமரம் போன்றவர். அவரால் வெளிவந்த பிராணவாயுவைச் சுவாசித்து எழுதத் தொடங்கிய என் போன்றவர்களின் கையைப் பிடித்து இலக்கியத்தின் ஏடு தொடக்கியவர். இந்தப்பயணத்தில் பல வருடங்கள் மனதளவில் என்னுடன் துரோணராக வந்தவர். சிலவேளையில் சிலருக்கு வேப்பம் கசப்பாக இருந்தாலும் ஈழத்து இலக்கியத்தில் முக்கிய பாவனைப் பொருளாக அவர் இருந்தார். இப்படிப்பட்ட எஸ்.பொ. வை ஆரம்பக்காலத்தில் நான், எனது நண்பனின் தந்தையாகவே சந்தித்தேன். எனது மனைவியும் அநுராவும் அவுஸ்திரேலியாவில் மருத்துவ பரீட்சைக்கு படித்த காலத்தில் அவரைச் சந்தித்தேன். அதற்கு முன்பு எஸ்.பொ.வை சந்தித்ததில்லை.கேள்விப்பட்டதில்லை.
அவுஸ்திரேலியாவில் உதயம் நடத்திய காலத்தில் நான் எழுதிய வீட்டு மிருகங்கள் மருத்துவ அனுபவம் பற்றிய கதைகளை ‘தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத பகுதியை நீ எழுதி இருக்கிறாய்” எனச் சொல்லி அவற்றை புத்தகமாகப் பிரசுரிக்க என்னைத் தூண்டினார். அதன்பின் என்னால் மதவாச்சிக் குறிப்புகளாகப் பல காலத்தின் முன்பு, எழுதிக் கிடப்பிலிருந்த கை எழுத்துப்பிரதியை வண்ணாத்திக்குளமாக்கத் தூண்டினார். அதன்பின் எனது இரண்டு புத்தகங்களை பதிப்பித்தார்.