புலம்பெயர் படைப்பாளர்களின் பாடுபொருள் - தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீனப் படைப்புக்கள் ஒப்பீடு! - முனைவர்.ர.விஜயப்ரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
முன்னுரை
இலக்கியங்கள் படைப்பாளிகளின் உள்ளத்து உணா்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. சமுதாயம் தன் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாகப் படைப்பாளி தன் இலக்கியத்தைப் படைக்கின்றான். சமுதாயத்தின் தாக்கத்தின் தன் பாடுபொருளாகக் கொள்கின்றான் . உலகத்தில் ஓர் இனத்தினரின் ஆக்கிரமிப்பால் புலம்பெயரும் பூர்வ குடிகள் தம்முடைய மனக்குமுறல்களைப் படைப்புக்களில் பதிவுசெய்கின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயா்ந்த தமிழா்கள் உலகின் பல்வேறு இடங்களில் குடிபுகுந்துள்ளனா். வெவ்வேறு நாடுகளில் குடிபெயா்ந்திருந்தாலும் அவா்களின் மனம் அவா்களுடைய சொந்த நாட்டைச் சுற்றியே வருவது இயல்பாகும். அதைப் போலவே பாலஸ்தீனத்தை இழந்த அரேபியர்கள் தம்முடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீனப் படைப்புக்களில் இடம்பெறும் பாடுபொருளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
இடம் பெயா்தல்
தனது ஊரை விட்டுப் பிற மாவட்டங்களுக்கு அல்லது மாநிலங்களுக்குச் சென்று வாழ்தல் இடம்பெயா்தலாகும். இடம் பெயா்தல் ஒரு திட்டமிட்ட வினையாகும். சான்று: பனை ஏறும் தொழிலாளா்கள் குமாி மாவட்டத்தை விடுத்துப் பிற மாவட்டங்களை நாடிச் செல்லுதலும் உாிய பருவத்தில் மீண்டும் தம்மிடம் நோக்கி வருதலும்
குடிப் பெயா்தல்
ஏதேனும் இயற்கைச் சீற்றம் காரணமாகச் சொந்த நாட்டிற்குள் வேறு இடங்களுக்கும் பிற நாடுகளுக்கும் சென்று வாழ்தல்குடிபெயா்தலாகும். குடிப்பெயா்தலும் ஓரளவு திட்டமிட்டே செய்யப்படுகிறது. சான்று: இந்தியாவில் பிளேக் நோய் பரவிய காலத்தில் மக்கள் இலங்கைக்குக் குடிபெயா்ந்தமை.
புலம் பெயா்தல்
தம் மண்ணில் வாழ முடியாமல் துரத்தப்படும் நிலையில் உயிருக்கு அஞ்சி வேற்றிடம் சென்று வாழ்தல் புலம் பெயா்தல் ஆகும். சான்று: ஈழத் தமிழா்கள் சிங்கள இராணுவத்தின் நெக்கடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பி ஓடி உலகின் பல்வேறு நாடுகளிலும் சென்று வாழ்தல்