- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -
11
“இன்னவைதாம் கவியெழுத” ஏற்ற பொருள் என்று எண்ணாமல் இன்னல், ஏழ்மை, உயர்வு, என்பவற்றை பாடுங்கள் என்று மஹாகவி ஆரம்ப காலத்திலேயே விடுத்த அறிவிப்பு, கூடவே, இதற்கு முன்னதாக, “கேடுற்றவரிடையே கெட்டழியாது என்னிடமே எஞ்சி கிடக்கின்ற இன்தமிழ், இவ் என்பாக்கள், என்றைக்கொரு நாளோ எத்திசையும் வெல்லும்” என்று அறிவித்துள்ளது, எல்லாமே, கூறுமாப்போல், இவரது வாழ்க்கை தரிசனம் என்பது பாரதியை விஞ்சிய ஆழத்தைக் கொண்டது தானோ என்ற கேள்வியை எழுப்புவதாய் உள்ளது.
மஹாகவியின் வாழ்க்கை தரிசனம் பொறுத்த பேராசிரியர் நுஃமான் அவர்களின் கூற்றினைமீள ஒருமுறை நினைவு கூறலாம்:
“மஹாகவியின் படைப்பகளினூடு பிரதியாக்கப்படும் உள்ளடக்கத்தை மூன்று நிலைப்படுத்தி நோக்கலாம்,
1. ஆழமான மனிதாபிமானம்.
2. வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3. ஏற்றத்தாழ்வின் மீதும், போலி ஆசாரங்களின் மீதுமான அவரது எதிர்ப்பு. (ப-20)
மேலும் கூறுவார்:
“இருந்தும் இயக்க பூர்வமான நடவடிக்கைகளில் இருந்து அவர் தனித்தே நின்றார்…” ப - 202
இதே போன்று நா.சுப்ரமணியன் அவர்களும் பின்வருமாறு கூறுவார்:
“…மஹாகவி கோட்பாடு ரீதியான பொதுவுடைமை சிந்தனைக்குள் நிற்காமல் தனக்கென தனித்த சமூகப் பார்வையை வளர்த்து கொண்டார்” ப-85
எழுத்துக்களில், சமத்துவத்தையும், மானுடத்தையும் உள்ளடக்கல் என்பது, ஜெயமோகன் முதல் நூறு, ஆயிரக்கணக்கான எழுத்துக்களில், பொதுவில் இலகுவாயும் சகஜமாயும் காணக்கூடிய ஒன்றுதான் என்றாகி விட்டது.