கவிஞர் மு.புஸ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத்தொகுப்பு பற்றிய 'பதிவுகள்' விவாதமொன்று!
கவிஞர் மு.புஸ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத்தொகுப்பு பற்றிய வெளியீட்டு நிகழ்வு கனடாவில் நடந்தது. அதனையொட்டிப் 'பதிவுகள்' இதழில் வெளியான மு.புஸ்பராஜனின் எதிர்வினையும், அதற்கான எழுத்தாளர் தேவகாந்தனின் எதிர்வினையும் ஒருங்குறியில் 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள் பிரசுரமாகின்றன. - பதிவுகள்.காம் -
பதிவுகள்.காம் ஆகஸ்ட் 2005 இதழ் 68
எழுத்தாளர் மு.புஸ்பராஜனின் எதிர்வினை: இலண்டன்! அவலை நினைத்து.. - மு.புஷ்பராஜன் -கனடாவில் 05-06-2005ல் ஸ்காபறோ சிவிக் சென்ரரில் (Scarborough Civic Center ) எனது 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வும் விமர்சன உரைகளும் ரதன் தலைமையில் நடைபெற்றன. அங்கு நான் சமூகமளிக்காத நிலையில் கவிதைத் தொகுப்பின்மீதும் என்மீதும் முன்வைக்கப்படீட விமர்சனங்களுக்கு பதிலாக இதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன். சம்பிரதாயமான தலைவரின் ஆரம்ப உரை எதுவுமின்றி கூட்டம் ஆரம்பமாகியது. அதிகாரங்களையும் மரபுகளையும் மீறுதல் இலக்கியத்தில் இனைந்த அம்சமாதலால் அதன் வெளிப்பாடாக முதலில் இதனைக் கருதினேன். ஒவ்வொருவர் உரைக்குப் பின்னும் தலைவர் உதிரி உதிரியாகத் தனது கருத்துக்களை முன்வைத்தார். அதில் என்மீது வைக்கப்பட்டவைகள் இவை:
- நான் கனடா வந்தபொழுது ஒரு தடவைகூட தங்களைச் சந்திக்கவில்லை. செல்வத்திடம் கேட்டபொழுது அவர் விடுதலைப் புலி ஆதரவாளர் என்றார். அது இப் புத்தகத்தில் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. -
'அலை' வெளிவந்த காலத்தில் தீண்டாமை பற்றிய போராட்டம் மிகத் தீவிரமடைந்திருந்தது. ஆது பற்றி வந்த கட்டுரைகளைவிட மார்க்சிய எதிர்ப்புக் கட்டுரைகளே அலையில் கூடுதலாகக் காணப்பட்டன. இதில் எனது கவிதை சார்ந்து ஒரே ஒரு கருத்துத்தான். அது நான் புலி ஆதரவாளன் என்பது எனது கவிதையில் அடிநாதமாக ஒலிக்கிறது என்பதே.