வெள்ளையானையின் சித்தரிப்பின்படி, பஞ்சங்கள் சூழ்ந்த நிலையில், அவலங்களும் கொடுமைகளும் கண்முன்னே விரிய ஒரு வகையில், கூடவேஷெல்லியின் தாக்கத்தாலோ என்னவோ, சமூக நீதிக்கான உள்ளுணர்வு ஏய்டனை மேலே கூறியவாறெல்லாம், தடுமாறவைக்க, காத்தவராயன் தன் “கருணை அரசியலோடு” வந்து சேர்கின்றான். காத்தவராயனின் மேற்படி கருணை அரசியலால், இறுதியில், இந்தியாவின் முதல் வேலை நிறுத்தமும் ஐஸ் ஹவுசில் வந்து சேர்ந்ததாய் நாவல் விபரிக்கின்றது. வேலை நிறுத்தங்களை, அதன்போது வேகம் பெறும் மனித நடத்தைகளை, அங்கே ஒன்றிணையும் திரள்களின் தோழமைகளை ஒன்றிணையும் திரட்சியின் தியாகங்களை, விவரிக்கும் நவீனங்களை இலக்கிய பாரம்பரியம் அறியும். ஆனால் திரு.ஜெயமோகன் அவர்கள் முன்நிறுத்தும் வேலைநிறுத்தம் சற்று வித்தியாசமானதாகவே அரங்கேறுகின்றது. வேலை நிறுத்தத்தை ஒழுங்கமைக்கும் தலித்திய வீரன் காத்தவராயன், வேலை நிறுத்தத்தை, கருணையின் அடிப்படையில் கட்டுவிக்க முனைகின்றான்.
“மூன்று நாள் போராட்டம் அதுதான் என் திட்டம். அதற்குள் நான் எல்லா செய்தி தாள்களுக்கும் செய்தி அனுப்பி விடுவேன்… மதராஸ் மெயில்… கடந்த பல மாதங்களாகவே பஞ்சம் பற்றிய செய்திகளை போட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களின் உதவி நமக்கு இருக்கும். போராட்டம் சமரசம் ஆனாலும் பிரிட்டிஷ் அரசு இதைப் பற்றி யோசிக்கும்… நான் டியூக் ஆஃப் பக்கிங்காமை நம்புகிறேன். அவரது கருணையின் ஒரு சொட்டு எங்கள் மக்கள் மீது விழுந்தாலே போதும். ஏனென்றால் நூற்றாண்டுகளாக கருணையென்றால் என்னவென்றே எம் மக்கள் அறிந்ததில்லை (பக்கம் 279).
அதாவது சிப்பாய் கலகம் முடிந்து 21 ஆண்டுகள் முடியும் முன்னரே காத்தவராயன் கட்சியினதோ அன்றி ஒரு தத்துவத்தினதோ வழிகாட்டலின்றி தனிமனிதனாய், ஆங்கிலேயரின் கருணையை அடித்தளமாக கொண்டு மேற்படி வேலை நிறுத்;தத்தைக் கட்டியெழுப்ப முற்படுவதாக சித்திரம். இதேவேளை மேலே கூறப்பட்ட, சிப்பாய் கலகத்தின் போது, குறைந்தது எட்டு லட்சம் பேரின் உயிர்களுக்கு உலைவைத்த - காவு கொண்ட ஆங்கிலேயர் ஆட்சி, பின்னர் பின்னால் வந்திருக்கக்கூடிய ஜாலியன் வாலா பாக் கொலைகள் - இவை அனைத்தும், ஆங்கிலேய ஆட்சி அதிகாரம் என்பது கருணையின் அடிப்படையிலா கட்டப்பட்டது என்பதைத் தெளிவாக்கும் வரலாற்று பதிவுகளாகின்றன.