சங்க இலக்கியத்தில் ‘மிளகு‘ - ஒரு பார்வை! - முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த் துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -
முன்னுரை
நோயில்லா நெறியை உணர்த்துவது உணவு நெறியாகும். உடலுக்கு ஒவ்வாத உணவு என்னும் வகை உணவை நீக்கி விட்டு, உடலுக்கு மனத்துக்கும் ஏற்ற உணவை உட்கொண்டால் உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் குற்றம் உண்டாகாது என்பர். உணவே உயிர் வாழ்வதற்குத் தேவையாகவும், உணவே உடல் நோய்க்கு மருந்தாகவும், அவ்வுணவே பல சமயங்களில் உடல் நோயைக் கொடுக்கும் மருந்தாகவும் அமைவதுண்டு. நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக மிளகை வணிகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனா். ஐரோப்பாவில் அந்த காலத்தில் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து சீதனமாக மிளகை தான் கொடுத்து வந்துள்ளனர். அந்த அளவிற்கு மிளகு மிகவும் விலை உயா்ந்த பொருளாக இருந்துள்ளது. இப்பொழுது ஒரு கிலோ தங்கத்தின் விலையை விட மிளகின் விலை அதிகமாக இருந்துள்ளது. மிளகுக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறன் மிளகுக்கு உண்டு. அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராம பகுதியில் கூறுவார்கள்.