நண்டுகளுக்கும் ஒரு மேம்பாலம்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
அப்போதுதான் பேய் மழை பெய்து ஓய்ந்திருந்தது! அடர்ந்த காடு. கதிரவன் வெளியே வரட்டுமா வேண்டாமா என தயங்கும் அதிகாலை வேளை. ஏதோ 'சர, சர' என்ற சப்தம் அந்தக் காட்டின் நிசப்தத்தை மெதுவாய் கலைத்தது. ஒரு செந்நிற கம்பளம் மெதுவாய் அக்காட்டில் இருந்து பரந்து விரிந்து கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கிற்று. இது என்ன மாயம்? அருகில் சென்றுதான் பார்ப்போமே. அட, அந்த செந்நிறத்தை தந்தது மையும் அல்ல.... மந்திரமும் அல்ல. அவைதான் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு செந்நிற நண்டுகள். 43.7 மில்லியன் நண்டுகள் இத்தீவு வாசிகள்! ஆஸ்திரேலியாவின் சனத்தொகையை விட (25.9 மி) ஏறத்தாள இரண்டு மடங்கு என்று வைத்துக்கொள்ளுங்களேன்!
இவை இத்தீவிற்கு தனித்துவமானவை. இவை ஜிகார்கோய்டியா (Gecarcodea) எனும் நிலநண்டு பேரினங்களுள் அடங்கும் உயிரினங்கள். இவை ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகளிலும் வாழ்ந்தாலும் கிறிஸ்மஸ் தீவுதான் இவைகளின் ஹெட் ஆபீஸ்! அது சரி, இந்த கிறிஸ்மஸ் தீவு எங்குதான் இருக்கிறதாம்? பூமிசாத்திர வகுப்பினுள் நுழைவோமா?