ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - என்.கே.மகாலிங்கம் -
அண்மையில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டில் வெளியான கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' நூலுக்கு எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுதிய விமர்சனக் குறிப்பு. உடல் நிலை காரணமாக அவரால் அன்று அந்த நிகழ்வுக்கு வரமுடியவில்லை. அதுவரை எழுதி வைத்திருந்த குறிப்பினை அனுப்பியிருந்தார். அதனை நிகழ்வில் தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் வாசித்தார். - வ.ந.கிரிதரன் -
ஒரு நகரத்து மனிதனின் பாடல் என்பது தான் இவர் இந்தத் தொகுதிக்கு வைத்த பெயர். ஆனால் எப்படியோ அது ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. (உண்மையில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் பெயரில்தான் எழுதியிருந்தேன். காரணம் இக்கவிதை நகரமயமாதலால் ஏற்படும் சூழற் பாதுகாப்பு பற்றிய ஒருவனின் புலம்பல் என்பதால். - வ.ந.கிரிதரன் -)
இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் தொகுதி எழுக அதிமானுடா 1992 இல் வெளிவந்திருக்கிறது. அது எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் எழுக அதிமானுடா என்பது எனக்கு பேர்ணாட் ஷா வின் மான் அன்ட் சுப்பர்மான் என்ற நாடகத்தையும் கடவுள் இறந்து விட்டார் என்று கூறிய பிரெடிரெக் நீட்ஷேயின் அதிமானிடனையும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. அவை டாவினின் உயிர் பரிணாம வளர்ச்சியில் நிகழும் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் இருக்கலாம். அரவிந்தரின் பேரறிவு நிலையாகவும் இருக்கலாம்.
இவரின் இக்கவிதைத் தொகுப்பு முன்னுரையிலும் சரி, கவிதைகளிலும் சரி அவர் இருப்பைப் பற்றியே எக்சிரென்சஸ் பற்றியே அதிகம் பேசுகிறார். அதுவே அவர் தேடலாகவும் இருக்கிறது. இந்தக் கவிதைத் தொகுப்பில் ஏறக்குறைய அத்தனையுமே இருப்பைப் பற்றிய தேடலாகத் தான் இருக்கிறது. எனக்கு வாசிக்கக் கிடைத்த மற்ற நூல்களான அமெரிக்கா, கட்டடக் காட்டு முயல்கள், குடிவரவாளன் ஆகியவை வித்தியாசமானவை. ஆனால் நவீன விக்கிரமாதித்தன் என்ற நாவலும் இருப்பைப் பற்றிய தேடலையே ஏதோ ஒருவகையில் அலசுகிறது. இவர் சொல்லும் இருப்பு வேறு இருத்தலியல் பிரச்சினை வேறு என்று தான் நினைக்கிறேன். இருப்புப் பற்றிய இவர் கவிதைகள் மெற்றாபிசிக்ஸ் என்ற மெய்யியல் வகையைச் சார்ந்தது. அது ஒன்ரோலொஜி என்ற வேறு ஒரு மெய்யியல் பிரிவுக்கு எடுத்துச் செல்கிறது.