லக்ஷ்மி சிரித்தாள்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
இப்போது முருகேசர் முழுவதுமாகவே மாறிவிட்டார். இதை பெரியவன் சபேசன் அவதானிக்காமல் இல்லை.
"அப்பு, இந்த கோப்பிய குடிச்சிட்டு இருங்கோவன்" என மருமகள் செல்வி காலையில் கொண்டு வந்த பால் கோப்பியை ஏறெடுத்தும் பார்க்கமல் "அந்த மேசையில வையுங்கோ பிள்ள" என்று அடித்தொண்டையில் இருந்து ஒரு முனுகலாக பதில் சொல்லிவிட்டு திரும்பிப்படுத்துக் கொண்டார். வழமையாக, கோப்பியின் நறுமணம் மூக்கில் நுழைந்ததுமே, எழுந்து கட்டிலில் உட்கார்ந்து இரு கைகளையும் உரசி சூடேற்றி நாக்கில் ஊறும் உமிழ்நீரை ஒரு மடக்கு விழுங்கி எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அந்த முருகேசர் எங்குதான் தொலைந்தாரோ? ஆம், மாறித்தான் விட்டார்.
முருகேசர் இப்படி கட்டிலில் முடங்கி தூங்குவதை மகன் சபேசன் அவதானித்தே இருந்தான். அவரின் ஆறடி உடல் இப்படி ஏன் குறுகிக்கொண்டது என அவன் கவலைப்படாமல் இல்லை. அப்பா எந்த கூட்டத்தில் நின்றாலும் அவர் கம்பீரம் அனைவரையும் ஆட்கொள்ளும். ஆனால் அவரின் குரலில் உள்ள பணிவு அவர்களுக்கு ஆச்சரியமே. உருவத்தால் உயர்ந்தவர்கள் உறுமத்தான் வேண்டும் என்பது உலக நியதியா என்ன? ஆலமரத்தில் இருந்து தேங்காயா விழுகிறது?
வந்த வேகத்தில் வார்த்தைகளை தெளித்து விட்டுப் போகும் மனிதரல்ல முருகேசர். ஆழ யோசித்து வார்த்தைகளை அடுக்கி அதன் இடையே பரிவு எனும் வெண்ணை பூசி வாயிலிருந்து விடுவிப்பார் அவர். கேட்போரின் செவிப்பறையை லாவகமாய் தட்டித் திறந்து வார்த்தைகள் பந்தியமைத்து அவர்கள் மனதில் உட்கார்ந்து கொள்ளும். அப்படி ஒரு இங்கிதம் அவரிடம்!