கம்பராமாயணத்தில் கிரகணம் குறித்த பதிவுகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
முன்னுரை
வானில் நிகழும் பல்வேறு விதமான செயல்பாட்டினை ஆராயும் இயலே ’வானியல்’ என்று அழைத்தனர். பண்டைய தமிழர்கள் வானியல் அறிவு நிரம்பப் பெற்று இருந்தனர் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும், கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்பினார்கள். கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குடுக்கை நக்கண்ணையார் போன்ற புலவர்கள் வானியல் துறையில் சிறந்து விளங்கினர். வானில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்துக் கம்பராமாயணத்தில் கூறப்பட்டிருந்தாலும் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் குறித்துக் கம்பர் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.
கிரகணம்
கிரகணம் என்பது வானியல் பொருள் ஒன்று, வேறொரு பொருளின் நிழலிலோ அல்லது வேறொரு பொருள் இப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் செல்வதாலோ தற்காலிகமாக மறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் சூரிய கிரகணத்தையோ அல்லது நிலா பூமியின் நிழலினுள் செல்லும்போது சந்திர கிரகணத்தையோ விவரிக்கிறது.