ஆய்வு: கடைக்காப்புச் செல்நெறி! - முனைவர் இரா. கோகுல் -
உலகெலாம் உணர்ந்து ஓதத்தக்க அருட்பாக்களை அருளிய அருட்புலவர்கள் திருமுறையாசிரியர்களும் ஆழ்வார்களும். அவர்கள் அருளிய அருட்பாக்கள் பன்னிரு திருமுறைகளாகவும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களாகவும் விளங்கி மக்களுளத்தில் இறைவேட்பினை அளித்து வருகின்றன. இறைவேட்பிலக்கியங்களான அவை பத்திமையை மட்டும் உட்கிடையாகக் கொண்டமையாமல் அக்காலத்திய வரலாற்றையும் கொண்டொளிர்கின்றது. குறிப்பாகக் கடைக்காப்பு இத்தன்மையன. அவை தரும் ஒளியில் வரலாற்றை அணுகுங்கால் தெள்ளிய நீரோடை போல அது காட்சிப்படும். நம்பகத்தன்மையுடைய வரலாறு வெளிப்படும். வரலாற்றெழுதியலுக்கு அவை உதவுமாற்றைச் சிறுகுறிப்புகளோடு எடுத்துக்காட்டும் போக்கில் இக்கட்டுரை அமைகிறது.
வரலாறெற்றெழுதியல்
வரலாறு என்பது அறிவியல்; கலையல்ல. கற்பனைகளுக்கு அதில் இடமில்லை. ஆனால் இலக்கியம் கற்பனையும் வரலாறும் கலந்தது. வரலாற்றைச் சுவைப்படுத்தித் தரும் இயல்பினது. இலக்கியத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக் கூறுகளைத் தக்க சான்றுகளோடு கண்டடைந்து எழுதப்படும் வரலாறு பெரும்பாலும் நம்பகத்தையோடு விளங்குமென நம்பலாம். அத்தகைய வரலாற்றெழுதியலுக்கு இறைவேட் பிலக்கியங்களான பன்னிரு திருமுறைகளும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களும் பெரிதும் துணைசெய்கின்றன. கி.பி. ஐந்தாம் நுற்றாண்டு தொடங்கி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரலயிலான தமிழ்நிலத்தின் பல்வேறு சூழமைவுகளை அவை தன்னுட் கொண்டுள்ளன. அவற்றை இனங்கண்டு ஆய்ந்து வெளிப்படுத்த வேண்டியது தமிழுணர்ந்தாரின் கடனாகும்.
கடைக்காப்பு
திருமுறையாசிரியர்களும் ஆழ்வார்களும் அருளிச்செய்த பதிகங்கள்/பாசுரங்களின் கடைப்பாடல் கடைக்காப்பு/பயன்தலைக்கட்டுதல் என்று வழங்கப்படுகின்றன. அக்கடைப்பாடல்களைச் சற்று உற்றுநோக்கிடின் அவற்றில் வரலாற்றெழுதிலுக்குதவும் சில அடிப்படை வினாக்களுக்கான விடையிருப்பதைக் காணலாம். அப்பாடல்கள் எங்கு பாடப்பட்டன? யார் பாடினார்? ஏன் பாடப்பட்டன? அவற்றைப் பாடடினால் என்ன கிடைக்கும்? என்பன அவ்வினாக்கள். ஒன்றிரண்டு குறைந்தும் மிக்கும் வருவனவும் உள. சான்றாக, திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தைக் கொண்டு இதனைக் காணலாம்.