- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -
சித்திரைப்புத்தாண்டை அண்மையில் கொண்டாடினோம்., பலர் சோபகிருது புத்தாண்டு வாழ்த்துகள் என்று வாழ்த்தினார்கள். சோபகிருது என்னும் வடமொழி சித்திரைப்புத்தாண்டில் எவ்விதம் நுழைந்தது ? சித்திரைப்புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டா என்பதை ஆராய்கிறது சூர்யா சேவியர் (Surya Xavier) எழுதிய இம்முகநூற் பதிவு. இப்பதிவில் தன் நிலைப்பாட்டை உணர்ச்சி வசப்படாது , தர்க்கபூர்வமாக , ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றார் பதிவாளர். இதனை எனக்கு அறியத்தந்த கவிஞர் தம்பாவுக்கு நன்றி. "சித்திரையை ஆண்டின் தொடக்கமாக கருதுபவர்கள் இதைக் கொண்டாடிவிட்டுப் போவதில் பிரச்சனையில்லை. உலகில் பலபகுதிகளில் பலவிதமான ஆண்டு தொடக்கங்கள் கொண்டாடப்பட்டே வருகிறது. இதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதில் தான் பிரச்சனை எழுகிறது. '' என்று பதிவாளர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம். எம் பால்ய பருவத்திலிருந்து சித்திரைப்புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றோம். அப்படியே கொண்டாடி வருவதில் பிரச்னையில்லை. தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடத் தேவையில்லை.
இப்பதிவில் பதிவாளார் "இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு." என்றும் கூறியிருப்பார். நான் அதனை முற்றிலும் தவறாகக் கருதவில்லை. நானும் இளவேனில் பங்குனி ,சித்திரை, வைகாசி என்றே கருதுகின்றேன். அப்பொழுதுதான் உயிரினங்கள் பலவற்றின் வசந்த காலம் அப்பொழுதுதான் ஆரம்பமாகின்றது. இலை உதிர்ந்த மரங்கள் அப்பொழுதுதான் தளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் பதிவாளர் "முன்பனி (புரட்டாசி - ஐப்பசி), பின்பனி (கார்த்திகை - மார்கழி)" என்று கூறுவதையும் என்னால் ஏற்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பின்பனிக்காலம் 'தை - மாசி'தான். அதனால்தான் 'மாசிப்பனி மூசிப்பெய்யும்' என்று நாம் கூறுவதுண்டு என்றும் கருதுகின்றேன். உண்மையில் என் அனுபவத்தின்படி மாசிப்பனி மூசித்தான் பெய்யும். - வ.ந.கிரிதரன் -
கிருஷ்ணரும், நாரதரும் கூடிப்பெற்ற 60 பிள்ளைகளில் 37 வது பிள்ளையின் பெயர் சோபகிருது. - சூர்யா சேவியர் (Surya Xavier)
ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.
கிருஷ்ணர் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணருடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றாராம். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்களாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்களாம். இதுதான் சித்திரையை புத்தாண்டு என்று சொல்வதற்கு சொல்லப்படும் புராணக்கதை. இக்கதைக்கு ஆதாரம் எது? சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றிய ஆ.சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்டு, இராமநாதபுரம் சேதுபதி பரம்பரையில் வந்த பாண்டித்துரை தேவர் உதவியால் 1910 வெளியிடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி. அபிதான சிந்தாமணி நூலின் 1392 ம் பக்கத்தில் தான், வருடப்பிறப்பு குறித்த, மேற்கூறப்பட்ட இக்கதை எழுதப்பட்டுள்ளது. 60 பெயர்களில் பிரபவ தொடங்கி அட்சய வரை எதுவும் தமிழ் பெயர் இல்லை.