அளம் நாவல் வெளிக்காட்டும் புலம்பெயர்தலின் அவலம்! - பேரா. செ.நாகேஸ்வரி, M.A.,B.Ed., M.Phil., NET, SET, (Ph.D), உதவிப்பேராசிரியர், இலொயோலா கல்லூரி, தமிழ்த்துறை, வேட்டவலம் -
ஆய்வுச் சுருக்கம்
சொந்த நாட்டை விட்டு அயல்நாட்டிற்கு வாழ்வாதாரம் தேடிச்செல்லும் நிலை தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் குடும்பத் தலைவன் தமது மனைவி, பிள்ளைகளை விடுத்து வெளிநாடு செல்லும் போது அக்குடும்பங்கள் சமூகத்தாலும், தங்களது சுயத்தேவைகளை நிவர்த்திச் செய்ய பொருளாதாரமின்றி பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். இதனை ‘இன்னல்’ என்ற வார்த்தைகளைக் கொண்டு கட்டமைத்துக் கூறிவிட முடியாது என்பதை “அளம்“ நாவலின் வழி தெளிவாக உணரலாகிறது. பொருளீட்டுதல் என்பது குடும்ப வாழ்க்கைக்கு தேவை என்றே இருப்பினும், அதைவிடத் தேவையானது குடும்பத்தின் மன நிம்மதியும் பாதுகாப்புமாகும். இவற்றை எவ்வளவு பொருளாதாராத்தை ஈட்டிக் கொணர்ந்தும் நிவர்த்தி செய்ய இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொந்த நாட்டில் சுயகௌரவம் பார்த்து உழைக்காமல் கிடைத்த வேலைகளைச் செய்தும், தங்களின் திறமைகளைக் கொண்டு வேலைகளை உருவாக்கியும், பொருள் ஈட்டி வாழ்வது மட்டுமே தங்களது குடும்பத்தையும், நாட்டையும் உயர்த்தும் என்பது அறியலாகிறது.
கலைச்சொல்லாக்கம்
அளம் - உப்பளம்; புலம் - இடம், திசை; கால் நகை - சிலம்பு; வாய்நகை - புன்னகை; சோணாடு – சோழநாடு; புலம் பெயர்தல் - இடம் பெயர்தல் அல்லது சொந்த ஊரை விட்டுச் செல்லுதல்; ஆயா அப்பன் - தாய் தந்தை; கப்பக்காரன் - கப்பலில் சென்று வேலைசெய்பவன்; சீல – சேலை; பச்சி – பறவை; ஆப்பை – கரண்டி; காசி – பணம்; பிராணன் - உயிர் ; வூடு – வீடு; ஆம்புடையான் - கணவன்.