படித்தோம் சொல்கின்றோம்: முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் எழுதிய பெண் நூறு - பெண் எனும் நான் நூல்கள் சொல்லும் செய்திகள் ! - முருகபூபதி -
மார்ச் 08 : அனைத்துலக பெண்கள் தினம் !
“வாழ்க்கை சவால்களால் நிறைந்துள்ளது. வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள், சில நேரங்களில் வலி நிரம்பியவையாக உள்ளன. சிலநேரம் அப்பாடங்கள் நாம் வளர வாய்ப்பளிக்கின்றன. அவை சவால்கள் போலத் தோன்றினாலும்கூட, அவை சாதனையாக மாற வல்லவை என்பதை மறுப்பதற்கில்லை. வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை. என்னால் செய்யமுடியும் என்று முன்வராமல், யாராவது நம்மைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பைத் தட்டில் வைத்து தருவார்கள் என எதிர்பார்ப்பதும் வாய்ப்புகள் வரும்போது, நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதும் முட்டாள்தனம்“ மேற்சொன்ன வரிகளுடன் தொடங்குகிறது, முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியன் எழுதியிருக்கும் பெண் நூறு என்ற நூல். ஒரு பெண்ணாக, பெண்களுக்கென்றே சந்திரிக்கா இதனை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இக்கருத்து ஆண்களுக்கும் பொருந்தும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இதே மார்ச் மாதம், இதே 08 ஆம் திகதி ஒரு மேல் நிலைப்பள்ளியில் பெண்கள் தினத்துக்காக சந்திரிக்கா பேச அழைக்கப்பட்டிருக்கிறார். ஒரு பெண்ணாக தான் சந்தித்த அனுபவங்களை அன்று பேசியிருக்கிறார். அதற்கு சிறந்த வரவேற்பு கிட்டியிருக்கிறது. அப்போதே அவரது மனதில் தோன்றிய தலைப்பு: Challenge the challenges. வீடு திரும்பியதும் தனது முகநூலில் இந்தத் தலைப்பில் தொடர்ந்து வாழ்வியல் அனுபவம் சார்ந்து நூறு நாட்கள் நூறு பதிவுகளை எழுதியிருக்கிறார். அதற்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த 2021 ஆம் ஆண்டே அவற்றை தொகுத்து நூலுருவாக்கியிருக்கிறார். என்னிடம் முகநூல் கணக்கு இல்லை. அதனால், அவரது குறிப்பிட்ட இந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டவில்லை.