கம்பராமாயணத்தில் இல் பொருள் உவமை அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, தற்குறிப்பேற்ற அணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இல்பொருள் உவமை அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் இல்பொருள் உவமை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.
இல் பொருள் உவமை அணி
உலகில் இல்லாத, நடைபெற முடியாத ஒன்றினை உவமையாகக் கொண்டு ஒரு பொருளை விளக்கிக் காட்டுவது இல் பொருள் உவமை அணி எனப்படும்.
தேய்வுஇலா முகமதி
கைகேயியிடம் கூனி வந்து இராமனுக்கு முடிசூட்ட இருப்பதை கூறுகிறாள். உடனே கைகேயியின் அன்பு எனும் கடல் ஆரவாரித்தது. தேய்வில்லாத முகமாகிய திங்கள் ஒளியுடன் விளங்கி தோன்றியது. ஞாயிறு முதலிய சுடர்களுக்கு எல்லாம் தலைமை என்று சொல்லத்தக்க அளவு ஒளி வீசும் பொன்மணிமாலை ஒன்றை கைகேயி, கூனிக்குக் கொடுத்தாள்.
“ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ
தேய்வுஇலா முகமதி விளங்கித் தேசுர “
(மந்தரை சூழ்ச்சிப் படலம் 145)
இதில் தேயாத மதி என்று புலவர் பாடியுள்ளார். தேயாதமதி என்பது உலகில் இல்லாத ஒன்று. ஆகவே இப்பாடல் இல் பொருள் உவமையாகும்.
கமலம் பூத்த தொடுகடல்
இராமன், சீதை திருமணத்தைக் காண அயோத்தியிலிருந்து அனைவரும் மிதிலை நோக்கிச் செல்கின்றனர். பொன் வளையல்கள் அணிந்த மகளிர் கூட்டம் கிண்கிணிமாலை அணிந்த குதிரைக் கூட்டங்களில் சுற்றிலும் வருகின்றனர். இக்காட்சி தாமரைப் பூக்கள் மலர்ந்த கடல் அலை போல இருந்தது. கடலில் தாமரை பூக்காது.