சந்திரா இரவீந்திரனின் 'மாமி சொன்ன கதைகள்'! - வ.ந.கிரிதரன் -
எனக்குத் தெரிந்து மாமியாருடனனான தமது அனுபவங்கள் எழுத்தில் வடித்தவர்கள் இருவர். ஒருவர் நடிகை பானுமதி ராமகிருஷ்ணா. அடுத்தவர் இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர் சந்திரா இரவீந்திரன். தற்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் அவர் இலங்கையில் இருந்த காலத்திலேயே சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதிக்கொண்டிருந்தவர். நீண்ட காலமாக அவர் சந்திரா இரவீந்திரனின் மூத்த அக்காவாக இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் பின்னர் புகலிடத்தில்தான் இருவருமே ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன்.
பானுமதி ராமகிருஷ்ணா மிகச்சிறந்த நடிகை, பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், நர்த்தகி மட்டுமல்லர் தெலுங்கில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும் கூட. இவர் தனது மாமியாருடனான அனுபவங்களை நகைச்சுவைப் புனைகதைகளாக்கித் தெலுங்கில் எழுதிய கதைகள் 'பானுமதி கதலு' என்னும் பெயரில் தொகுப்பாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது. அத்துடன் ஆந்திர மாநிலத்தின் சாகித்திய விருதினையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை தமிழில் ராணிமுத்து வெளியீடாக எனது பால்ய பருவத்தில் 'மாமியார் கதைகள்' என்னும் பெயரில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியானது. கதைகள் 'மாமியாரும் ஆவக்காய் ஊறுகாயும்' போன்ற தலைப்புகளில் இருந்தன. வாசித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தது இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது. பின்னர் வானதி பதிப்பகத்தின் வெளியீடாக இரு தொகுதிகள் வெளிவந்தன. 'மாமியார் கதைகள்', 'மாமியாரும் புதையலும்' என்னும் தலைப்புகளில் வெளியாகின.