ஆய்வு: குந்தவையின் எழுத்து வல்லபம் - கலாநிதி சு. குணேஸ்வரன் -
அறிமுகம்
கிராமத்தின் மிக முதிர்ந்த வயதுடைய பெரியவர்களைக் காணும்போதெல்லாம் அவர்களுடைய அன்றைய உணவுப் பழக்கவழக்கங்களும் உளவடுவற்ற வாழ்வியல் அம்சங்களும் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுத்திருக்கின்றன என்று எண்ணத்தோன்றுகிறது. அது உண்மைதான் போலும். ஒரு தலைமுறை, ஓடித் திரிந்து வளர்கின்ற பருவத்தில் யுத்தமும் சேர்ந்து வளர்ந்ததால் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாமல் குந்தவையின் கதைகள் நினைவுக்கு வருகின்றன.
தமிழ்ச் சமூகத்தின் சிதைந்துபோன வாழ்வையும் உளநெருக்குவாரங்களையும் குந்தவையின் அதிகமான கதைகள் பதிவு செய்திருக்கின்றன. “தமிழ்ச் சமூகத்தை ஆட்டிப் படைக்கும் அவலங்கள், அவசரங்கள், விசனங்கள், விக்கினங்கள், துக்கங்கள், துயரங்கள் ஆகியவற்றிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்ளாமல் அதில் வாழும் ஒரு உயிர்ப்புள்ள சாட்சியாக கதைகளை நகர்த்துகின்றார். ஈழத்தின் சமகால அவலங்களை, அவற்றின் குறியீடுகளை அல்ல. அவற்றின் பல்வகைத்தான கொடூர அழிபாடுகளை அவர் கதைகள் பதிவு செய்கின்றன. உலகப் போர்களுக்குப் பின்னர், போர்க்கால அவலங்களும், அழிவுகளும் இடப்பெயர்வுகளும் இந்தக் கதைகளிலேதான் மிகுந்த அவதானிப்புடன் சித்திரிக்கப்பட்டுள்ளன.” (யோகம் இருக்கிறது, முன்னீடு) என்று எஸ்.பொ கூறுவதில் மிகையில்லையென்பதை குந்தவையின் சிறுகதைகளை ஒருசேரப் படிப்பவர்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.
குந்தவை தனது 22ஆவது வயதில் ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்ற முதற்சிறுகதையை ஆனந்தவிகடனில் (1963) எழுதினார். இம் முத்திரைக்கதையுடனே எழுத்துலகத்திற்கு அறிமுகமானார். கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், கலைமகள் என்று இவரின் வாசிப்புப் பழக்கம் தொடர்ந்திருக்கிறது. குந்தவை என்ற புனைபெயரைப் பூண்டதற்கு பொன்னியின் செல்வன்தான் காரணம் எனக் கூறும்போது, “வரலாற்றில் எப்படியோ தெரியாது. ஆனால் கல்கி; சோழச் சக்கரவர்த்தி, முதன் மந்திரி எல்லோரும் ஆலோசனைக்கு அணுகும் ஒரு ஆளுமை நிறைந்த அதேநேரம் அமைதியான பாத்திரமாகக் ‘குந்தவை’யைப் படைத்துள்ளனர். விகடனுக்கு என ஒரு கதை எழுதிவிட்டு புனைபெயரைத் தேடிய பொழுது இப்பெயரே என் முதல் தெரிவாயிற்று” (2007, கலைமுகம் நேர்காணல்) என்று தன் புனைபெயருக்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.