அஞ்சலிக்குறிப்பு: இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில் மறைந்தார்! - முருகபூபதி -
"கலையோ இலக்கியமோ எதுவானாலும்,மானுட மேம்பாடு கருதியே படைக்கப்படுதல் வேண்டும் என்பது என் கட்சி. இதனை கலை, இலக்கிய சிருஷ்டியாளர்கள் தமது தார்மீகக் கடப்பாடாக கொள்வதே நியாயமென நினைக்கிறேன். இந்த அடிப்படையில்தான், வெறும் கதா இரசனைக்காக வரட்டுக் கற்பனாவாதமாக கதை பண்ணாமல், அன்றாடம் நான் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை யதார்த்த ரீதியில் இனம் காட்டுமுகமாக புனைகதைத் துறையை நாடலானேன். இதனால் மகத்தாக எதையோ சாதித்துவிட்டேன் என்றோ, சாதிப்பேன் என்றோ, நான் மனப்பால் குடிக்கவில்லை. எனினும், ஏதோ ஒரு தாக்கத்தினை எதிரொலியை ஒரு சிறு நெருடலை என் கதைகள், என்றோ எப்போதோ எவரிடமோ ஏற்படுத்துமேயானால், ஶ்ரீராமசேனையின் சேதுபந்தன உருவாக்கத்தில் பங்குகொண்ட சிறு அணிலைப்போல ஆனந்தமடைவேன்"
இவ்வாறு 1983 ஆம் ஆண்டு இலங்கைத் தலைநகரில் கலவரம் வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் - மார்ச்சில் 'யுகமலர்' என்ற தனது கதைத்தொகுதியை வெளியிட்டபோது கூறிய எங்கள் ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில் கல்கரி மாநகரில் இம்மாதம் 18 ஆம் திகதி மறைந்துவிட்டார்.
"எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும்" என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால், நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாததொன்று. அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட்டம் நினைவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவிவரத்தான் செய்கிறது. எனினும் நீண்ட காலம் புதை குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம். அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம், விஸ்வரூபத்திலேயே மக்கள் அதைத் தரிசிக்கின்றனர். அப்படி ஒரு தரிசனம தான். இந்த மாவீரன் டாக்டர் செண்பகராமன் வரலாறு.