குணா கவியழகனின் 'நஞ்சுண்ட காடு' - ஒரு பார்வை - கலாநிதி சு. குணேஸ்வரன் -
தமிழ் மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக போருக்குள்ளே வாழ்ந்தவர்கள். அந்த வாழ்க்கைப்பாடுகளை ஈழத்துப் புனைகதைகள் விரிவாகப் பதிவு செய்துள்ளன. ஒருபுறத்தில் போரால் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சிதைவுகளும் மறுபுறத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இருபுறத்தார் மீதான விமர்சனங்களும் ஈழ - புகலிடப் படைப்புக்களில் அதிகம் பதிவாகியுள்ளன. பொதுவாகவே மக்களின் பக்கமிருந்து பொது எதிரியை விளித்து எழுதப்பட்ட புனைகதைகளும் அதிகமதிகம் வெளிவந்தன. விலகல்கள் எனும்போது தமிழ்ப் போராட்டக் குழுக்களின் அரசியல் முரண்பாடுகள், அமைப்புக்களின் தன்னிச்சையான அதிகாரப்போக்கை எதிர்த்து எழுதப்பெற்ற படைப்புக்கள் 80களின் இறுதியில் இருந்து அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளன. புகலிடச் சூழலும் இதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தியது. இன்னொரு புறத்தில் போராட்டத்தின் தேவை சார்ந்தும் அதன் அமைப்பு சார்ந்தும் உள்ளிருந்து எழுதப்பெற்ற படைப்புக்களும் வெளிவந்தன. அருளரின் லங்காராணி (1978), தா. பாலகணேசனின் விடிவுக்கு முந்திய மரணங்கள் (1986), மலரவனின் போருலா (1993) முதலான புனைவுகளை உதாரணமாகக் கூறலாம்.
இந்த அடிப்படையில் குணா கவியழகன் தான் சார்ந்த அமைப்புக்குள் இருந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோரின் பார்வையில் இந்நாவலை எழுதியுள்ளார். ஒரு கொள்கைக்காகத் தங்களைத் தியாகம் செய்வதில் எதிர்கொள்கின்ற இடர்ப்பாடுகள், அவர்களுக்கு இருக்கக்கூடிய வசதியீனங்கள் இவற்றைத் தாண்டித்தான் தம் வாழ்வைத் தியாகம் செய்கிறார்கள் என்பதை நாவல் காட்டுகிறது. விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட இளைஞர்களது குடும்பங்கள் அக்காலங்களில் பட்ட வாழ்க்கைப் பாடுகளைக் கருவாகக் கொண்டமைந்ததே நஞ்சுண்ட காடு. இது இவரது முதல் நாவலாகும். இதற்குப் பின்னரும் தொடர்ச்சியாக வேறு நாவல்களை எழுதியுள்ளார்.
ஓர் அமைப்பைச் சார்ந்தோர் அதன் உள்விவகாரங்களை எழுதிய காரணத்தால் உயிர் அச்சுறுத்தலுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஆளானார்கள் என்பது நாம் அறிந்த வரலாறு. இதற்கு நல்ல உதாரணமாகக் கோவிந்தனைக் (புதியதோர் உலகம்) குறிப்பிடலாம். ஆனால் இது வித்தியாசமானது. இந்நாவலில் பிற்பகுதியில் கூறப்படும் மக்களின் வாழ்வு அதிகமும் ஈழப்படைப்பாளிகளால் பதிவாக்கப்பட்டமை நாம் அறிந்ததே.