காலத்தால் அழியாத கானம்: "வித்தாரக் கள்ளியெல்லாம் விறகு வெட்டப் போகையிலே" - ஊர்க்குருவி -
"கையைத் தொட்டதும் மெய்யைச் சிலிர்க்குதே.
காதலின் வேகம் தானா?
அந்திக் காலத்தின் யோகம்தானா?
அனுராகத்தின் யோகம்தானா?" - கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் -
எம்ஜிஆருக்கு மாறு வேசங்கள் பொருந்துவதைப்போல் வேறெந்த நடிகருக்கும் பொருந்துவதில்லை. பல படங்களில் மாறு வேடங்களில் வந்து அவர் பாடும் பாடல்கள் பல கருத்தாழம் மிக்கவை. ஆனால் 'குலேபகாவலி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் ஒரு காதற் பாடல். இதில் எம்ஜிஆருடன் நடித்திருப்பவர் நாற்பதுகளில், ஐம்பதுகளில் தமிழ்த்திரையுலகின் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி. (இயக்குநர் டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரி. சென்னையில் நீண்ட காலம் இயங்கிய ராஜகுமாரி திரையரங்கின் உரிமையாளர்.)
இந்தப்படத்தில் முதுமையான வேடமிட்டு எம்ஜிஆர் நடிக்கும்போது அவருக்கு வயது 38. எம்ஜிஆர் டி.ஆர்.ராஜகுமாரியின் தோழிகளுடன் ஆடிப்பாடிக்கொண்டிருப்பார். அச்சமயம் அங்கு டி.ஆர்.ராஜகுமாரி வருவார். எம்ஜிஆர் மயங்கி விழுந்தது போன்று நடிப்பார். அவரைத் தன் மடியில் போட்டு 'தாத்தா' என்றழைத்து அவர் சுகம் விசாரிப்பார் ராஜகுமாரி. அதற்குப் பதிலளிக்கும் எம்ஜிஆர் தன் உடலின் பல்வேறு பாகங்களிலும் வலி இருப்பதாகக் கூறுவார். ராஜகுமாரியும் அவர் குறிப்பிடும் இடங்களில் தொட்டு 'இங்கேயா?' என்று கேட்பார். அவ்விதம் எம்ஜிஆர் தன் மார்பில் வலி இருப்பதாகக் கூறவே அங்கு தன் கையை வைத்து 'இங்கேயா' என்று ராஜகுமாரி கேட்கவே எம்ஜிஆர் அவர் கையைப்பிடித்து
"கையைத் தொட்டதும் மெய்யைச் சிலிர்க்குதே.
காதலின் வேகம் தானா?
அந்திக் காலத்தின் யோகம்தானா?
அனுராகத்தின் யோகம்தானா?" என்று பாடுவார்.
இப்பாடலில் இவ்வரிகள் வரும் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல் வரிகளும் அதைப் பாடும் டி.எம்.எஸ்ஸின் குரலும், அச்சமயம் ஒலிக்கும் பின்னணி இசையும், எம்ஜிஆரின் நடிப்பும், எம்ஜிஆர் இவ்விதம் கூறவே அதற்குத் தன் முகபாவங்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ராஜகுமாரியின் நடிப்பும் இப்பாடற் காட்சியில் எனக்கு மிகவும் பிடித்த கட்டங்கள்.