நூல் மதிப்பீடு: முருகபூபதியின் 'இலங்கையில் பாரதி' - நடேசன் -
எமது அண்டை நாடான பாரத தேசத்தில் பிறந்த மூவர் நமது இலங்கையில் தங்களது சிந்தனைகள் , செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள். அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர். அவர் இலங்கைக்கு வந்தாரோ, இல்லையோ, அவரது உபதேசங்கள் இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன், அவரது அரசியல் கருத்து போராட்ட வழி முறைகள் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது.
உண்ணாவிரதம், அகிம்சை வழி, கடையடைப்பு என இங்கும் தமிழர், சிங்களவர் என இரு இனத்தவரும் அத்தகைய போராட்ட வடிவங்களை முன்னெடுத்தார்கள். ஆனால், இலங்கைக்கு வராதபோதிலும் பட்டி தொட்டி எங்கும் தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
மற்றைய இருவரிலும் பார்க்க, இவர் ஒரு விடயத்தால் முக்கியத்துவமாகிறார்.
கௌதம புத்தரை இலங்கை, கடந்த 75 வருடங்களாகத் தேர்தல் அரசியல் சரக்காக மாற்றியதுடன், இனக்கலவரம் , போர் என மூலப்பொருளாகப் பாவித்து பெரும்பான்மையான சிங்கள அரசியல்வாதிகள், அவரது கீர்த்தியை அபகீர்த்தியுடைய வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
அதேபோன்று தமிழ் அரசியல்வாதிகள் காந்தியின் கொள்கைகளை தங்களது சுயநலவாத அரசியலுக்குப் பாவித்தார்கள். போதாக்குறைக்கு ஆயுதத்தில் நம்பிக்கை வைத்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்சென்னையில் உண்ணாவிரதமுமிருந்தார். அவரது தளபதியான திலீபன் இந்திய அமைதிப்படைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இவற்றை மன்னிக்க முடியும். ஆனால், வன்னியில் அவர்களின் சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவருக்கு காந்தி என்ற பெயரை வைத்திருந்தார்கள்.