அடையாள , அரசியலைப் பேசும் மாரி செல்வராஜின் மாமன்னன்! - ஊர்க்குருவி -
மாமன்னன் திரைப்படத்தைத் தமிழ்த்திரையுலகின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக நான் இனங்காண்கின்றேன். முக்கிய காரணம் இயக்குநர் மாரி செல்வராஜ் இத்திரைப்படத்தில் கையாண்டுள்ள கரு.அதனை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள். வசனங்கள். நடிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள்.
கலைஞரின் பராசக்தி வசனங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றனவோ அவ்விதம் இத்திரைப்படத்தின் சில காட்சிகள், வசனங்கள் நிலைத்து நிற்கப்போகின்றன. உதாரணங்களாகப் பின்வருவனற்றைக் கூறலாம்:
1. தகப்பன் வடிவேலைப் பார்த்து மகன் உதயநிதி கதிரையில் உட்காரச் சொல்வது. அக்காட்சியில் அற்புதமாக நடித்திருப்பார் வடிவேலு. அவரது உடல் மொழி சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. கடைசியில் மகனின் உத்தரவுக்கமைய கதிரையில் அமர்வதும், எழாமல் இருக்கும்போது காட்டும் முகபாவங்களும் மறக்க முடியாதவை.
மேலும் இக்காட்சி முக்கியமானதொரு குறியீட்டுக் காட்சி. சமூக அடக்குமுறைகளுக்கெதிராகப் போராட வேண்டுமென்பதை, அடங்கி விடக்கூடாதென்பதை எடுத்துக்காட்டும் மிகவும் வலிமையான குறியீட்டுக் காட்சி. சமூக அநீதிகளுக்குள் அடங்கி, ஒடுங்கிக் கிடக்கும் எவரையும் அதனை எதிர்கொண்டு , எதிர்த்துப்போராட வேண்டுமென்பதை எடுத்துக்காட்டும் மிகவும் வலிமையான குறியீடாகவே இக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மிகவும் முக்கியமானது.
2. அச்சமயத்தில் வில்லனாக வரும் Fahadh Faasil கூறும் வசனம் : 'நான் அவரை உட்காரச்சொன்னது என் அடையாளம். உன்னை உட்காரச் சொன்னது என் அரசியல்' வசனகர்த்தாவை நினைவில் வைத்திருக்கச் செய்யும் வசனமிது. Fahadh Faasil சிறந்த நடிகர். பல்வேறு விருதுகளை நடிப்புக்காகப் பெற்ற நடிகர். அவரை நன்கு பாவித்திருக்கின்றார் இயக்குநர் இத்திரைப்படத்தில்.