தோழர் கார்த்திகேசன் நினைவாக....
- ஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம். அதனையொட்டிச் 'சக்கரம்.காம்' இணையத்தளத்தில் வெளியான கட்டுரையை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம்.- பதிவுகள். -
தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி, 2010 ஆம் ஆண்டு அவரது 33வது நினைவுதினத்தின் போது தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டு, 02.09.2010 இல் தினகரனில் வெளிவந்த கட்டுரை நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. வடக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்ற வைத்தவர்
‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என இலங்கையின் வடபுலத்து மக்களாலும், ‘காத்தார்’ என யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சமூகத்தாலும் அன்புடனும், அர்த்தத்துடனும் அழைக்கப்பட்டு வந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசன் (மு.கா) அமரத்துவமடைந்து, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதியுடன் 33 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
இந்த 33 வருடங்களில் அவர் பெரிதும் நேசித்து வந்த தமிழ் மக்களின் வாழ்விலும், உலக அரங்கிலும் எவ்வளவோ பிரமாண்டமான மாற்றங்கள் நிகழ்ந்தேறிவிட்டன.
இந்த மாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம், அவை பற்றி, கார்த்திகேசன் உயிருடனிருந்திருந்தால், என்ன கருத்துகளைக் கூறியிருப்பார், அவற்றுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருப்பார், என்னென்ன நகைச்சுவைகளை அவிழ்த்திருப்பார் என, அவருடன் பழகிய பல்வகை மனிதர்களும் நிச்சயமாக ஊகங்களை வெளியிட்டிருப்பர்.
எமது மதிப்புக்குரிய ஆசானும், தோழருமான கார்த்திகேசன் 1919ம் ஆண்டு இப்பூமியில் அவதரித்து, 1977ல் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் இப்பூவுலகில் வாழ்ந்தது மொத்தம் 58 ஆண்டுகள் மட்டுமே. சுமார் அரை நூற்றாண்டுகால இவ்வாழ்க்கையில், அவர் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலும், தமிழ் மக்கள் வாழ்விலும் பதித்து விட்டுச் சென்ற சுவடுகள் என்றும் காலத்தால் அழியாதவை.
உலக வரலாற்றில் சொற்ப காலம் வாழ்ந்தாலும், மனித சமுதாயத்துக்காக என்றென்றைக்குமாக தமது வாழ்வை அர்ப்பணித்துவிட்டுச் சென்ற, லெனின், சேகுவேரா, ஜூலியஸ் பூசிக், பகத்சிங், சுப்பிரமணிய பாரதி போன்றோரின் வரிசையில், எமது தேசத்தின் அழியாத சொத்தாக கார்த்திகேசனும் இருக்கிறார் என்பதை நாம் எவ்வித தயக்கமும் இன்றி பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.
கார்த்திகேசன் தனது கல்லூரிப் படிப்பை மலேசியாவில் முடித்த பின்னர், தாயகம் திரும்பி இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் ஒரு மாணவராகச் சேர்ந்து பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், மார்க்சிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டார்.