10 ஜூலை 2020
"நீண்ட தர்க்கங்கள், பிணக்குகள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளின் பின்னர் இலங்கையின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. அதே வேளை, எண்ணற்ற பொய்யான வாக்குறுதிகளாலும் தவறான ஊடகப் பிரச்சார மேலீட்டாலும் குழம்பிப்போயுள்ள பலர், தமது அரசியல் எதிர்காலத்தை வேறு யாரேனும் தீர்மானிக்கட்டும் என்று பேசாமல் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு சோர்ந்துபோய் அக்கறையின்றி இருப்போரிடமிருந்தே இத்தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உண்மையில் இவர்களால்தான் இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். “
இவ்வாறு வெளிநாடுகளில் வதியும் இலங்கையின் எதிர்கால நலனை பெரிதும் விரும்பும் இலங்கையர்களின் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை தெரிவிக்கும் இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஒரு ஜனநாயக ஆட்சி தவறிப் போகும் வேளையில் மக்கள் அமைதியாக தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி அதை சரிப்படுத்தல் வேண்டும். அதுவே உங்கள் வாக்கின் சக்தி. அச் சக்தியை பெருமையுடனும், புத்திசாதுரியத்துடனும் பயன்படுத்த இதுவே தக்க தருணம். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் எனத் தற்போதைய இடைக்கால அரசு திண்ணமாகக் கூறியிருப்பதானது, கடந்த ஆட்சியின்போது ‘அதிகாரச் சமநிலையை’ ஏற்படுத்த பெரும் சிரமத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை இல்லாதொழிக்கும் ஓர் துணிகர முயற்சியேயாகும். இந்நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டை ஆளத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், 2015 இற்கு முந்திய தசாப்தத்தில் நிலவிய அளவுக்கு மிஞ்சிய பேராசை, ஜனாதிபதி ஆணைகள், ஆணவம் என்பன தொடரும் என்பது எண்ணிப்பார்க்க முடியாததொன்றல்ல. சர்வாதிகார ஆட்சி ஒன்றே இலங்கைக்குப் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தரக்கூடியது எனும் திட்டமிட்ட தவறான பரப்புரையானது, ‘தண்டனை விதிவிலக்குக் கலாச்சாரம்’ மற்றும் ‘அடக்குமுறைச் சமூக ஒழுங்கு’ என்பவற்றை நிறுவனமயமாக்கும் நோக்கைக் கொண்டுள்ளது.