ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்! - நந்திவர்மப் பல்லவன் -
தென்னிந்தியத் தமிழர்களின் அரசியலில் இலங்கைத் தமிழர்கள் தலையிடக் கூடாது.அப்படித் தலையிட்டு ஒரு கட்சி சார்பாக இருப்பது அனைத்துத் தமிழர்களின் ஆதரவையும் சீர்குலைப்பதாக அமையும். அண்ணா தலைமையிலான, கலைஞர் தலைமையிலான , எம்ஜிஆர் தலைமையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஒன்றிணைந்து ஆதரவளித்தார்கள்.
இன்று என்ன நடக்கிறதென்றால்... நாம் தமிழர் கட்சி விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொண்டு செய்யும் தன் நலன் சார்ந்த அரசியலால், விடுதலைப்புலிகள் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர்கள் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றார் சீமான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அது திராவிடக் கட்சிகளின் கோட்டையாகத்தான் இருக்கிறது. இன்னும் இருந்து வரும். ஏன் என்றால் அந்த அளவுக்குத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் சுயாட்சி, சமத்துவம், சமநீதி, பகுத்தறிவுக்காக விழிப்புணர்வினை ஏற்றியிருக்கின்றன.
ஊழல், குடும்ப ஆட்சி என்பவற்றுக்கெதிராகக் குரல் எழுப்புவதும் அவற்றின் அடிப்படையில் தேர்தலில் நிற்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். நாம் தமிழர் போன்ற கட்சிகள் அவ்விதமே செயற்பட வேண்டும். அதற்கு மாறாகத் தம் சுய அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களின் துயரையும், வலியையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவ்விதம் செய்வதன் மூலம் அவர்கள் தமிழகத்தின் பெருமான்மையான மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களின் மீதான ஆதரவைச் சீர்குலைக்கின்றார்கள்.