புதைகுழிகளாக மாறிய பள்ளிமைதானங்கள்! - குரு அரவிந்தன் -
இது எந்த நாட்டில் நடந்தது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்களுக்குப் புகலிடம் தந்து எங்களை அரவணைத்த கனடா நாட்டில்தான் நடந்திருக்கின்றது. புதைகுழிகள் என்றதும் எங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தாயகத்தில் செம்மணிப் புதைகுழிதான். செம்மணியைத் தொடர்ந்து தாயகத்தில் ஏராளமான புதைகுழிகள் வரலாற்றில் பதியப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டன. யுத்த சூழலில் இன்னும் அனேகமான புதைகுழிகள் அடையாளம் காட்டப்படாமலே இருக்கின்றன. இரண்டு தலைமுறை போனால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பில் எல்லாமே மூடிமறைக்கப் பட்டிருக்கின்றன. காலம்கடந்தாலும், மறைக்கப்பட்ட யுத்தகாலப் புதைகுழிகள் ஒருநாள் தோண்டப்படும் போது பல உண்மைகள் தெரிய வரலாம். ஆனால் இதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதற்குக் குற்றம் புரிந்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தினம் தினம் எதிர்கொள்ளும் வலியும், வேதனையும் யாருக்கும் சொல்லிப் புரியப்போவதில்லை. சொந்த மண்ணைப் பறிகொடுத்த, எங்களுக்கு ஏற்பட்ட அதே வலியைத்தான் இங்கே உள்ள முதற்குடி மக்களும் எதிர் கொள்கிறார்கள். ஆனால் இங்கு ஜனநாயக கோட்பாடுகள் பின்பற்றப்படுவதால், உண்மையை ஓரளவாவது கண்டறிய முடிகின்றது. 2008 ஆம் ஆண்டு கனடா பிரதமர் இப்படி நடந்தற்காக முதற்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். தற்போதய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கத்தோலிக்க திருச்சபை இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இழப்பு இழப்புத்தானே!