தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழியா? - வ.ந.கிரிதரன் -
மானுட இனதத்தின் வளர்ச்சிப் போக்கில்
பல படி நிலைகள்.
குரங்கிலிருந்து வந்தவர் மனிதர் என்ப்ர்.
புதுமைப்பித்தனோ முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு
என்றாலே மகிழ்வர் எம்மவர் என்பார்.
குரங்கிலிருந்து வந்தவர்,
குகைகளில் வாழ்ந்தார்.
குழுக்களாக வாழ்ந்தார்.
பெண் வழிக்குடும்பத்தைக் கண்டார்.
பொதுவுடமை பேணினார்.
தனியுடமை கண்டார்.
தனித்து வாழத்தொடங்கினார்.
வர்க்கங்களாகப் பிரிந்தார்.
வர்ணங்களாகப் பிரிந்தார்.
மதம், மொழியெனப் பிரிந்தார்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்!" என்றான்
நம் கவிஞன். கேட்டாரா?
குரங்கிலிருந்து வந்தவர்
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்.
நம்மவரோ
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
யார் வாழ்ந்தார்? வாழ்வார்?
யார் இருந்தார்? யார் இருப்பார்?