ஊடக அறிக்கை- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) : 23 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எமது பாராட்டுதல்கள்
பெப்ரவரி 18,2014- இராஜிவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம். சென்ற மாதம் உச்சநீதி மன்றம் வீரப்பன் கூட்டாளிகள் 15 பேர் சமர்ப்பித்த கருணைமனு மீது முடிவெடுக்க ஏற்பட்ட தாமதம், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டமைனயாகக் குறைக்க ஒரு முகாந்திரமாகக் கருதலாம் என்று கூறி அவர்களுக்கு வழங்கபட்டிருந்த மரண தண்டனையைக் குறைத்திருந்தது. அதே போல இராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மனுவையும் விசாரித்த தலைமை நீதியரசர்கள் சதாசிவம், இரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு இந்த வரலாற்றுப் புகழ்படைத்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பில் இந்த வழக்கில் மூவரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள் என்பதால் குற்றவியல் சட்டத்தின் 432 மற்றும் 433 ஏ பிரிவுகளின் அடிப்படையில், மாநில அரசு தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் சட்ட அடிப்படையிலும் இவர்களுடைய சிறை தண்டனை காலத்தை பற்றிய முடிவை எடுக்கலாம் என்று தலைமை நீதிபதி சதாசிவம் கூறி இருந்தார்.