83 ஜூலை இனப்படுகொலை நினைவுகள். . - வ.ந.கிரிதரன் -
- ஓவியர் புகழேந்தியின் ஓவியம். -
83 ஜூலை இனப்படுகொலை இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு திருப்புமுனை. இலங்கையை 26 வருடங்கள் சமூக யுத்ததில் மூழ்கிப்போக வழி வகுத்த இனப்படுகொலையது. போர் நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத்தந்தது. இரு பக்கத்திலும் படையினர், விடுதலைப்போராளிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். பொதுமக்கள் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினையை உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றியது ஜூலை 83 படுகொலைகளே. இதனை மறந்து விட்டால் மீண்டும் நாட்டில் இன்னுமொரு 'ஜூலை இனப்படுகொலை' ஏற்படும் நிலை ஏற்படலாம். மீண்டும் நாடு யுத்தத்துக்குள் மூழ்கி விடலாம்.
அந்நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென்றால் நாட்டில் சகல இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்தின மக்களும் எவ்வித அச்சமுமற்று, அன்புடன், இணைந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சந்தேகங்களும் , அச்சமும் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
ஆம்! 83 ஜூலை இனப்படுகொலையை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். மீண்டுமொரு 83 ஜூலை இனப்படுகொலை போன்றதொரு நிகழ்வு நிகழாதிருப்பதற்காக, புரியப்பட்ட அநீதிக்கு நீதி கிடைப்பதற்காக, மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.
இங்கு கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய 83 ஜூலை இனப்படுகொலை பற்றிய முகநூல் நினைவுக்குறிப்புகளிலிருந்து சில குறிப்புகளை (சில எதிர்வினைகளையும்) இணைத்திருக்கின்றேன். இவற்றில் நினைவு கூரப்படுபவையெல்லாம் , ஜூலை 83 பற்றி நினைக்கும்போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவை. உங்கள் நினைவுகளிலும்தாம்.