குறுந்தொகை காட்டும் தமிழர் வாழ்வியல் - முனைவர் ச. ஆதிநாராயணசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -
பண்டைத் தமிழரின் வாழ்வியலானது பண்பாட்டுக் கூறுகள் மிகுந்ததாகும். தமிழர் உயர்ந்த ஒழுக்கங்களைத் தம் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய மேலான வாழ்வியலுக்குச் சான்றாக அமைவன சங்க இலக்கியங்களாகும். அவை மனித வாழ்வியலை அகம் புறம் என இருதிறத்ததாய்ப் பகுத்துக் காட்டுகின்றன. பண்டைத் தமிழரின் அகவாழ்வையும் அதன் சிறப்பியல்புகளையும் எடுத்துக்கூறும் நூலாகக் குறுந்தொகை அமைகிறது. குறுந்தொகையில் அமைந்துள்ள தமிழர் வாழ்வியல் பற்றிய கருத்துக்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
குறுந்தொகை
சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்றாக அமைவது குறுந்தொகையாகும். இந்நூல் குறுகிய அடிகளில் ஆழமான கருத்துகளைக் கூறும் நூலாக அமைகிறது. இக்குறுந்தொகை நானூறு பாடல்களைக் கொண்டதாதலின் குறுந்தொகை நானூறு எனவும் வழங்கப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். தொகை நூற்களுள் குறுந்தொகைக்கெனத் தனித்த இடமுண்டு. இதனை “நல்ல குறுந்தொகை” என்ற பழம்பாடல் பதத்தால் அறியலாம். தொகை நூற்களுள் சான்றோரால் மிகுதியும் எடுத்தாளப்பட்ட பெறுமை குறுந்தொகைக்கு உண்டு. இது மனித வாழ்வின் பல நுட்பமான கூறுகளை இனிமையுற எடுத்துக்காட்டியுள்ளது.
இல்லறத்தில் புரிதல்
தமிழர் சுட்டும் அகம் புறம் ஆகிய இருநிலைகளுள் மனத்தை அடிப்படையாகக் கொண்ட அகமே புறத்திற்கும் அடிப்படை என்பதை “அகத்தை யொத்தே புறம் (வாழ்வு) அமைகின்றது”1 எனும் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் கருத்தால் உணரலாம். அகமானது இல்லற வாழ்வியலைக் கூறுவது. தமிழர் பண்பாட்டில் உயர்ந்த நிலையில் இருப்பது இல்லறமாகும். துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. திருக்குறள் இல்லறம் துறவறம் ஆகிய இரு வாழ்வியல் நெறிகளுள் இல்லறத்தை முதன்மைப்படுத்தியுள்ளது. இதனை “திருக்குறள், வாழ்வியலை வகையுற விளக்கப் போந்து, இல்லறத்திற்கே முதன்மை கொடுக்கின்றது”2 எனும் சி. இலக்குவனார் கூற்றால் அறியலாம். இல்லறத்தைப் பேணுகின்ற கணவனும் மனைவியும் ஒத்த அன்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மனைக்கு அழகென அமைவது தலைவனும் தலைவியும் தம்முள்கொண்ட புரிதலாகும். இப்புரிதலைக் குறித்து குறுந்தொகையில் ஓரம்போகியார் கூறும் பொழுது,
“காஞ்சியூரன் கொடுமை
கரந்தன ளாகலி னாணிய வருமே” 3
எனப் பாடுகின்றார். இப்பாடலில் தலைவன் தலைவியினிடத்து ஊடல் கொண்டு தலைவியைக் கடிந்துரைக்கின்றான். புறத்தே சென்ற தலைவன் மீண்டும் இல்லத்திற்குத் திரும்பும்போது தாம் காலையில் கொண்ட ஊடலின் காரணமாகத் தலைவி வருத்தம் கொண்டிருப்பாள். தன்னிடத்து உரையாடமாட்டாள் என்று நினைத்தவாறு இல்லத்திற்குள் புகுகின்றான். அச்சமயம் தலைவியானவள் காலையில் நிகழ்ந்த ஊடலைச் சிறிதும் நினையாதவள் போல் இயல்பாய் நடந்து கொள்கிறாள். இச் செயலைக் கண்ட தலைவன் தான் செய்த தவறை நினைந்து நாணுகிறான். இவ்விடத்து இல்லறத்தார் பேணுகின்ற உயர்நெறியாகிய அன்பும் புரிதலும் எடுத்துரைக்கப்படுகிறது.