முதலாவது சந்திப்பு 50: உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் ‘ பதிவுகள் ‘ கிரிதரன் ! - முருகபூபதி -
- எழுத்தாளர் முருகபூபதி , யாழ் மாவட்டத்திலிருந்து வெளியாகும் 'தீம்புனல்' வாரப் பத்திரிகையின் நவம்பர் 20, 2023 பதிப்பில் 'முதலாவது சந்திப்பு' தொடரில் 'உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் பதிவுகள் கிரிதரன்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை. பதிவுகள் இணைய இதழ் பற்றியும் என்னைப்பற்றியும் அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி. - வ.ந.கி -
எழுத்துலகம் விசித்திரமானது. ஒரு எழுத்தாளரை மற்றும் ஒரு எழுத்தாளர் எளிதில் அங்கீகரித்துவிடமாட்டார். புராணத்தில் வரும் சிவனுக்கும் அரசவைப் புலவர் நக்கீரனுக்குமிடையே நிகழ்ந்த வாதம் பற்றி அறிவீர்கள்.
“ ஒரு பெண்ணின் கூந்தலின் மணம் எவ்வாறிருந்தால்தான் என்ன..? அதற்காக வாதப்பிரதிவாதமா..? அதற்காக நெற்றிக்கண்ணால் சுட்டு பொசுக்க வேண்டுமா..? இதுவும் வன்முறைதானே ! “ என்று இன்றைய எமது குழந்தைகள் வினா தொடுக்கிறார்கள். அடுத்துவந்த, கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் மத்தியில் நிகழ்ந்த வாதங்களும் பேசப்பட்டுள்ளன. மொத்தத்தில் எழுத்துலகம் விமர்சனம், அவதூறு, மோதல், எதிர்வினை, தாக்குதல் எனத்தொடருகின்றது. முகநூல் அறிமுகமானதன் பின்னர், நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. இந்தப்பின்னணிகளுடன்தான், கனடாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் இணைய இதழை தங்கு தடையின்றி நடத்திவரும் வ. ந. கிரிதரன் அவர்களை அவதானிக்கின்றேன்.