இலக்கியவாதி, கலைஞர், மருத்துவப் பேராசிரியர் நந்தி! - வி. ரி. இளங்கோவன் -
ஈழத்தில் மருத்துவத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கலை இலக்கியத்துறைகளில் ஈடுபடுவது குறைவு. தமிழ் இலக்கியத்துறையில் அவ்வாறு ஈடுபட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் ஒருவர் மிகச் சிறப்பானவராக விளங்கினார். பாராட்டுகள் பெற்றார். புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியராக விளங்கியதோடு, புகழ்பெற்ற, சிறந்த இலக்கியவாதியாக, நாடக, சினிமா நடிகராகத் திகழ்ந்தவர் டாக்டர் நந்தி என எல்லோராலும் அறியப்பட்ட செ. சிவஞானசுந்தரம் அவர்களாவார்.
யாழ்ப்பாணம் - இணுவிலில் 1928 -ம் ஆண்டு பிறந்த நந்தி யாழ்ப்பாணத்தில் ஆரம்பக்கல்வியைக் கற்றபின் கொழும்பு சென்ற் யோசப் கல்லூரி, றோயல் கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வியைக் கற்றார். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுபெற்றுக் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் கற்று 'எம். பி. பி. எஸ்.' பட்டம் (1955) பெற்றார். சிறிய தந்தையார் பேராசிரியர் வி. செல்வநாயகம், இலட்சுமண ஐயர் உட்பட சிலரிடம் முறைப்படி தமிழ் அறிவையும் வளர்த்துக்கொண்டார். குருநாகல், ஹிரிப்பிட்டியா, கொழும்பு, நாவலப்பிட்டி, யாழ்ப்பாணம் ஆதியாம் இடங்களில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார். 1965 ஆண்டு முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூக வைத்தியத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1968 - 1971 காலத்தில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் 'டி. பி. எச்.' பட்டமும் 'பி. எச். டி.' பட்டமும் பெற்றுக்கொண்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து விரிவுரையாளராக, இணைப்பேராசிரியராக, பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1979 -ல் இணைந்து சமூக வைத்தியப் பிரிவுப் பேராசிரியராகத், துறைத் தலைவராக, மருத்துவத்துறைப் பீடாதிபதியாக 1993 -ம் ஆண்டுவரை பணியாற்றினார். இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேசம், சிங்கப்பூர், இந்தியா, யோர்தான், பிரித்தானியா ஆதியாம் நாடுகளில் மருத்துவக் கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார். இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிச் சமர்ப்பித்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் கற்கும் காலத்தில் இலங்கை வானொலி நாடகங்களில் விருப்பத்துடன் நடித்துள்ளார். 'குரங்குகள்' என்ற நாடகத்தை எழுதி (1975)வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் காவலூர் இராசதுரை கதை வசனத்தில், பிரபல இயக்குனர் தர்மசேன பத்திராஜ◌ா இயக்கத்தில் உருவான 'பொன்மணி' திரைப்படத்தில் டாக்டர் நந்தி, தந்தை வேடமேற்று நடித்ததை அருகிருந்து யான் பார்த்திருக்கிறேன்.