- * தெளிவாகப் பார்க்க கீழுள்ள படத்தைக் 'கிளிக்' பண்ணவும் . -
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“தமிழ்ச் சூழலில் அச்சுப் பண்பாட்டு இயக்கத்திலும் பதிப்புத்துறையிலும் ஈழத்தவர் பணிகள் மகத்தானவை. அச்சு, பதிப்பு ஆகியவற்றினூடு தமிழியல் வரலாற்றைக் கட்டமைப்பதிலும் பாதுகாப்பதிலும் நவீனப்படுதுவதிலும் ஈழத்தவரின் சாதனைகள் முன்னோடியானவை. அச்சியந்திரங்களைக் கொணர்ந்து அச்சியந்திர சாலைகளை நிறுவுதல், ஓலைச் சுவடிகளை அச்சேற்றி நூல்களுக்கு நிலையான ஆயுள் அளித்தல், அச்சிட்ட நூல்களைப் பரப்புவதனூடு அறிவுப் பரவலாக்கத்தை நிகழ்த்துதல் முதலாய செயற்பாடுகளை காலனிய காலத்தில் மேற்கொண்ட ஈழத்து அறிஞர்கள், தமிழ்ப் பதிப்புலகின் கேந்திர தேசமாக ஈழநாட்டை மிளிரச் செய்தனர். ‘சீர்பதித்த நற்பதிப்பு மூலவர்’ ஆறுமுக நாவலர், ‘பதிப்பு உலகின் தலைமைப் பேராசிரியர்’ சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரதும் அவர்களைப் பின்பற்றி இத்துறைசார்ந்து ஈடுபட்டோரதும் பணிகளை ஆராய்ந்து பயன்கொள்வது நமது கடமையாகும்” என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடையும் காலம்வரை, நூல்களை அச்சு வாகனம் ஏற்றிய ஈழத்து அறிஞர், பதிப்பாளர், அச்சுக்கலை நிபுணர் முதலியோரின் பல்வகைப் பணிகள், அவற்றின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை அடையாளங் காணல், அவற்றைச் சமூக பண்பாட்டுப் பின்புலத்தில் வாசித்தல், அதன்வழி ஆவணப்படுத்தல் ஆகியவை இந்த மாநாட்டுக் கருப்பொருளின் முக்கிய நோக்கங்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் அச்செழுத்து, அச்செழுத்து உருவாக்க முன்னோடிகள், அச்செழுத்து வடிவமைப்பு, அச்சியந்திரசாலைகளின் வளர்ச்சி, அச்சுக்கலை நிபுணர்கள், சுவடிகளும் பதிப்புகளும், சமயம்சார் அச்சுப் பதிப்பு வளர்ச்சி, பிராந்திய ரீதியான அச்சுப் பதிப்பு வரலாறு, அச்சுப் பதிப்பு முன்னோடிகள், பதிப்பு ஆளுமைகளும் பணிகளும், சமயம், சமூகம், பண்பாடு சார்ந்த பதிப்புகள், பல்வகை வடிவப் பதிப்புகள், இலக்கணப் பதிப்புகள், இலக்கியப் பதிப்புகள், பாடப் புத்தகப் பதிப்புகள், கலைப் புத்தகப் பதிப்புக்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள், பதிப்பு நூல்களில் அலங்கார அமைதி, ஈழத்தவர் தமிழ் நாட்டில் புரிந்த பதிப்புச் சாதனைகள், ஒப்பியல் நோக்கில் பதிப்பு ஆளுமைகள் ஆகிய தலைப்புகளில் அல்லது அவற்றையொட்டியதாக ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பிவைக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக் கட்டுரை தமிழ் மொழியிலும், பிரசுரமாகாததாயும் இருத்தல் வேண்டும் என்றும் பாமினி எழுத்துருவில் A 4 தாளில் 10-12 பக்கங்களில் அமைய வேண்டும் என்றும் கட்டுரையின் அமைப்பானது தலைப்பு, கட்டுரையாளர் பெயர், 250 சொற்களில் திறவுச் சொற்களுடன்கூடிய ஆய்வுச் சுருக்கம், ஆய்வுக் கட்டுரை, ஹாவாட் முறை அடிக்குறிப்பு, உசாத்துணை நூற்பட்டியல் என்ற அமைப்பில் அமைய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைத் தலைப்பை 10.06.2022இற்கு முன்னர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் மூலம் அறிவித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் 20.07.2022 முன்னர் கட்டுரையை அனுப்பவேண்டும் என்றும் அறிவித்துள்ளது. சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள் மாநாட்டின் முதல் நாளில் நூலாக வெளியிடப்படவுள்ளது. தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஶ்ரீ. பிரசாந்தன் தலைமையிலும், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ. சுதர்சன், விரிவுரையாளர் திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் ஆகியோரது ஒருங்கிணைப்பிலும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள், துறைசார் புலமையாளர்கள், முன்னணிப் பதிப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.