தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு! - த. நரேஸ் நியூட்டன் -
காலம் காலமாக பல்வேறு வகையான வெளியீடுகள் வெளியீட்டு நிகழ்வுகள் மூலமாக பல்வேறு எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. முழு நீளத் திரைப்படம், குறுந்திரைப்படம், இசைகலந்த பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகள் என்று வெளியீடுகளையும் அவை சார் வெளியீட்டு நிகழ்வுகளையும் அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவற்றுள் திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் தவிர்ந்த ஏனைய வெளியீடுகளில் நூல் வெளியீடுகள் முக்கிய இடம்பெறுகின்றன. நூல் வெளியீடுகளில் பல தரப்பினரும் அழைப்பிற்கு அமைவாக கலந்துகொள்வதுண்டு. அந்த வகையில் அண்மையில் எனக்கும் ஒரு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது எனது மனதில் பதிந்த சில விடயங்களை வைத்துக்கொண்டு நூல் வெளியீடுகளின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்களை புதிய மற்றும் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு எதிர்காலத்தில் பயனளிக்கும் பொருட்டு இந்த ஆக்கத்தை படைத்துள்ளேன். இங்கு மூத்த எழுத்தாளர்களை தவிர்த்து புதிய மற்றும் வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் என்று நான் குறிப்பிட்டமைக்கு காரணம் மூத்த எழுத்தாளர்களைப்பொறுத்தவரை அவர்கள் போதுமான அனுபவங்களைப் பெற்றவர்கள். ஆகவே முக்கியமாக புதிய எழுத்தாளர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே எனது அபிப்பிராயம்.
அண்மையில் பிரபல எழுத்தாளர் ஒருவருடைய காணொளியொன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த காணொளியில் ஒரு சந்தர்ப்பத்தில் ‘இன்று எழுத்தாளர்களுள் சிலர் வெளியீட்டு மோகம் உள்ளவர்களாக எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்’ அதாவது தாம் எழுதிய படைப்பை வெளியிட்டுவிடவேண்டும் என்ற அவா அவர்களிடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கருத்துப்பட ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அவசரம் அவசரமாக வெளிவரும் பல வெளியீடுகளை பார்க்கையில் இவரது கருத்து மிக நீண்ட காலமாக அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகிறது. இந்த விடயமும் எனது மனதின் ஆழத்தில் பதிந்திருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது அந்த விடயமும் இந்த வெளியீட்டு நிகழ்வின் போக்கும் அனேகமாக இந்த ஆக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துவதாகவே அமைகிறது.