அஞ்சலிக்குறிப்பு: சிறுகதை இலக்கியத்தில் அழகியலை ஆராதித்த குப்பிழான் ஐ. சண்முகன் - முருகபூபதி -
அண்மைக்காலமாக , காலை விடியும்போது இன்று என்ன செய்தி வரப்போகிறதோ? என்ற யோசனையுடன்தான் துயில் எழுகின்றேன். இந்த யோசனை கொவிட் பெருந்தொற்று பரவிய காலத்திலிருந்து தொடருகின்றது. அடுத்தடுத்து எமது கலை, இலக்கிய குடும்பத்திலிருந்து பலரும் விடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இயல்பாகவே மரண பயமும் வருகின்றது.
கடந்த 24 ஆம் திகதி காலை விடிந்தபோது, சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான இலக்கிய நண்பர் கானா. பிரபாவிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில், எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் முதல் நாள் 23 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. என்ன நடந்தது? என நான் தொலைபேசி ஊடாக கேட்பதற்கு முன்பே, அவர் என்னைத் தொடர்புகொண்டு இந்த துயரச் செய்தியை மேலும் ஊர்ஜிதப்படுத்திச் சொன்னார்.
இறுதியாக சில வருடங்களுக்கு முன்னர் வடமராட்சிக்கு சென்றிருந்தபோது, இலக்கிய நண்பர் தெணியானுடன், குப்பிழான் ஐ. சண்முகனை பார்க்கச்சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் இல்லாத வடமராட்சிக்குத்தான் இனிவரும் காலங்களில் வரப்போகின்றேன் என்பதை நினைக்கும்போது சோகம் மனதை அழுத்துகிறது. தனது பெயரின் தொடக்கத்தில் குப்பிழான் என்ற பூர்வீக ஊரின் பெயரை சண்முகன் பதிவுசெய்துகொண்டிருந்தாலும், அவரது வாழ்க்கை பெரும்பாலும் கழிந்தது, கரணவாயில்தான்.
1970 களில் நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் அவர் கொழும்பு மலே வீதியில் அமைந்திருந்த அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதே வீதியில் அமைந்திருந்த இலங்கை ஆசிரியர் சங்க பணிமனையில் நான் சிறிது காலம் வேலை செய்துகொண்டிருந்தபோது குப்பிழான் சண்முகனை அடிக்கடி சென்று பார்ப்பேன்.