தொடர்நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (11) : இயற்கை பற்றிய கண்ணம்மாவுடனான உரையாடலொன்று - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் பதினொன்று - இயற்கை பற்றிய கண்ணம்மாவுடனான உரையாடலொன்று.
"கண்ணம்மா, இயற்கை எவ்வளவு அழகானது. படைப்புத்திறன் மிக்கது." என்றேன்.
அதற்கு அவள் இவ்விதம் பதிலிறுத்தாள்:
"கண்ணா, நீ கூறுவது மிகவும் சரியான கூற்று. உண்மையில் நானும் இவ்விதம் அடிக்கடி எண்ணுவதுண்டு. உண்மையில் இயற்கையின் அழகு, நேர்த்தி, படைப்புத்திறன் என்னை எப்பொழுதும் பிரமிக்க வைப்பவை. இவை பற்றி அறிய, புரிய என் இருப்பு முழுவதையும் அர்ப்பணித்தாலும் நான் மகிழ்வேன் கண்ணா."
"கண்ணம்மா, உண்மையில் இயற்கையின் படைப்புத்திறனே என்னைப் பெரிதும் வியக்க வைக்கின்றது."
"கண்ணா, வெளியில் விரிந்திருக்கும் இப்பிரமாண்டமான பிரபஞ்சம் மட்டுமல்ல, கண்ணுக்கே புலப்படாத குவாண்டம் உலகிலும்தான் எவ்வளவு நேர்த்தியாக எல்லாமே படைக்கப்பட்டுள்ளன. உள்ளும் , வெளியும் காணும் அனைத்திலுமே படைப்புத்திறன் வெளிப்பட்டு என்னை வியக்க வைக்கின்றது."
அருகிலமர்ந்து என் தோளுடன் சாய்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் மனோரஞ்சிதத்தை, என் கண்ணம்மாவை, ஒரு கணம் நோக்குகின்றேன். பொட்டும் , இரட்டைப்பின்னலுமாக பதின்ம வயதுப்பிராயத்தில் காட்சி தந்ததுபோலவே இன்றுமிருக்கின்றாள். நான் அவளையே வைத்த கண் வாங்காது உற்றுப்பார்க்கவே அப்பார்வையின் வீச்சு தாங்காமல் ஒரு கணம் வெட்கம் கவிழ முகம் தாழ்த்தினாள். மறுகணமே தன்னைச் சுதாரித்துகொண்டாள். அத்துடன் கேட்டாள்:
"என்ன பார்க்கிறாய் கண்ணா?"
"இல்லை, இந்த அழகு, இந்தச் சிரிப்பு, இந்தக் குறும்பு இவையெல்லாம் உண்மையா? இங்கு நான் படைப்புத்திறனை , இயற்கையின் படைப்புத்திறனை வியக்கின்றேன் கண்ணம்மா. கண்ணம்மா, நான் இயற்கையை, இந்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கித்தான் கூறுகின்றேனடி, அனைத்தையும் படைத்ததாகக் காண்கின்றேன். நாம் எம் புலன்களைக் கொண்டு இயற்கையை நூறு வீதம் அறிய முடியாது. இல்லையா? அதுவரை , அவ்விதமானதொரு அறியும் நிலை வரும்வரை , இயற்கையே என் கடவுள். நாம் அனைவரும் இயற்கை அன்னையின் குழந்தைகள். இதுதான் என் நிலைப்பாடு."