
- அண்மையில் ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) எழுதிய எம்.எம்.நெளஷாத்தின் 'பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்' என்னும் அவரது முகநூற் பதிவிது. நாவலைப்பற்றிய நல்லதொரு , மனத்தைக் கவரும் வகையில் எழுதப்பட்டிக்கும் விமர்சனமிது. நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகின்ற விமர்சனம். முகநூலில் வெளியான இக்கட்டுரை விபரிக்கும் 'பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்' நாவலினை உலகளாவியரீதியில் வசிக்கும் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதன் அவசியம் கருதி மீள்பிரசுரமாகின்றது. பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம், பக்கங்கள் 188, முதலாவது வெளியீடு 2022, கஸல் பதிப்பகம், ஏறாவூர், இலங்கை. விலை ரூ 900.00, - பதிவுகள்.காம் -
1.
நாவல் பல்வேறு தரப்பாராலும் விரும்பி வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாகும். கதைகளிலும், வரலாறுகளிலும் விருப்பம் கொள்ளுகின்ற உணர்ச்சியுள்ள மனித மனமானது நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல எனலாம். நாவல்கள் தனி மனிதச் சிக்கல்களையும், சமுதாயச் சிக்கல்களையும் எடுத்துக் காட்டும் கதைக்களங்களையும், கற்பனையான உரை நடைகளையும் கொண்டிருக்கும். நாவல்கள் முதலாம் நிலை அனுபவங்களாகவும், இரண்டாம், மூன்றாம்நிலை அனுபவங்களாகவும் அல்லது இவைகளுடன் கற்பனைகள் கலக்கப்பட்டதாகவும் காணப்படலாம். நாவலை சரியாக வரைவிலக்கணப்படுத்த முடியாது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
சமீபகாலமாக தமிழில் அந்நியப் பெயர்களை (குறிப்பாக அறபுப் பெயர்களை) வைக்கும் ”மோஸ்தர் நிலவுகின்றது. உதாரணமாக மூமின், சலாம் அலைக், பர்தா, ஆயத் போன்றவைகளைக் குறிப்பிடலாம். இதன் இன்னொரு வகையாக சமீபத்தில் மலையாள வாடை அடிக்கக்கூடிய இரண்டு தமிழ் வரவுகள் கவனத்தை ஈர்த்தன. ஒன்று ”என்டெ சீவியத்திலிருந்து…” என்ற எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களுடைய கட்டுரைத் தொகுப்பு. மற்றையது டொக்டர் எம்.எம். நௌசாத் அவர்களின் ”பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்” என்ற நாவலுமாகும்.
பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம், பக்கங்கள் 188, முதலாவது வெளியீடு 2022, கஸல் பதிப்பகம், ஏறாவூர், இலங்கை. விலை ரூ 900.00, இந்தியா ரூ 220.00. லார்க் பாஸ்கரனின் அட்டை வடிவமைப்பும், நீல நிறத்தில் தரமான அட்டையும், சந்தோஸ் கொலன்ஜியின் புத்தக வடிவமைப்பும், சிறப்பான துாய்மையான நுாலாக்கமும், நாவலுக்கு மேலும் ஒரு பெறுதியைச் சேர்க்கின்றது.
மொனறாகலை நகரிலிருந்து பதுளை நகரிற்கு செல்லும் வழியில் பதினாறாவது மைல் துாரத்தில் இடது பக்கம் மேல் நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு கிராமம் இருக்கின்றது. அது குக்கிராமம். அதன் பெயர் சாம்பல்மேடு. இந்தக் கிராமம் வருடாந்த கந்துாரி ஒன்றுக்கும் பெயர் போனதாகும். இந்த மக்கள் விருநதோம்பலுக்கும், ஆதரிப்புக்களும் பெயர் போனவர்கள். அங்கு வாழ்ந்துவரும் பேகம் கதீஜா என்னும் பெண்ணுடன் அல்லது பெண்ணை மையமாக வைத்து அவளின் சாமானிய ஜீவியக் கதை தொடங்குகின்றது. பேகம் கதீஜா பிறக்கும் போது அவளது தாய் இறந்து போகிறாள். பிறந்தது பெண் பிள்ளை என்று தெரிந்ததும் தகப்பனும் அவளை விட்டு அல்லது அந்தக் கிராமத்தை விட்டு ஓடிப் போகிறான். அதன் பின்னர் கதீஜா அன்பானவளும், கண்டிப்பானவளுமான தனது பாட்டியுடன் வளர்கிறாள். (கதீஜாவின் தாய், கதீஜாவின் பாட்டிக்கு திருமணம் முடித்து ஒரு மாத இல்லற வாழ்வில் கிடைத்தவள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பாட்டியின் கணவனும் சந்தேகம் கொண்டு பல காலங்களுக்கு முன்பு பாட்டியை விட்டுப் பிரிகிறான் என்ற கிளைக்கதையும் இங்கு இருக்கின்றது).