பெயரடை மற்றும் தமிழின் புணர்ச்சி விதிகள்: சில சிந்தனைகள்! - மதுரன் தமிழவேள் (தவ சஜிதரன்) -
சின்னக் கலைவாணர் X சின்ன கலைவாணர்: எது சரி? சின்னத்தாய் வல்லொற்றொலி விடுத்துச் சின்னதாய் ஆவாளா? கவிஞர் மகுடேசுவரனின் கட்டுரையை முன்வைத்துச் சில இலக்கணச் சிந்தனைகள்!
அண்மையில் தினமலர் இதழில் கவிஞர் மகுடேசுவரன் ஓர் இலக்கண விளக்கக் கட்டுரை எழுதியிருந்தார். ‘சின்னக் கலைவாணர்’ போன்ற சொற்றொடர்களில் வல்லொற்று மிகல் ஆகாது; சின்ன கலைவாணர் என்றே எழுத வேண்டும் என்பது அச் சிறுகட்டுரையின் சாரம்.
அதனை முகநூலிலும் பகிர்ந்திருந்தார்.
மறைந்த நடிகர் விவேக் பெயரில் அவர் வாழ்ந்த தெருவுக்குத் தமிழக அரசு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று பெயர் சூட்டியிருக்கிறது. இது பிழை என்பதைச் சுட்டிக்காட்டியே கவிஞர் கட்டுரை வரைந்திருந்தார்.
பொதுவெளியில் இடம்பெறும் தமிழ்ப்பிழைகளைச் சுட்டித் திருத்துவது; அவற்றின் இலக்கண வரம்புகளை எடுத்துரைப்பது என்றவாறு கவிஞர் செய்துவரும் அருந்தமிழ்த் தொண்டின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரை அது.
அதன்கண் அவர் விளக்கும் பெயரெச்சம் பற்றிய பொதுவான இலக்கண விதி பற்றி ஐயுற ஏதுமில்லை.
பெரிய, கரிய, சிறிய, அரிய, வறிய, நல்ல, வல்ல முதலான அகர ஈறு கொண்ட பெயரெச்சங்களை அடுத்து வருஞ்சொல், வல்லின எழுத்தில் தொடங்கும்போது ஒற்று மிகாது என்பதே அந்த விதி.
‘நல்ல தமிழ்’ என்றெழுதுவதே நல்ல தமிழ். அல்லாமல் நல்லத் தமிழ் என்றெழுதின் அது பொல்லாத்தமிழ். ஐயமில்லை.
ஆனால் இந்த விளக்கத்தின் முடிவாகச் ‘சின்னக் கலைவாணர்’ என்பதைச் ‘சின்ன கலைவாணர்’ என்றே எழுத வேண்டும் – ‘சின்ன’ என்ற பெயரெச்சத்தை அடுத்து ‘க்’ என்ற வல்லின ஒற்று அங்கு வரலாகாது – என்று அவர் சொல்கிறபோது இயல்பான மொழி பழகிய மனது ஏனோ தயக்கம் கொள்கிறது.