படித்தோம் சொல்கின்றோம்: நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் - முருகபூபதி -
நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர், நாட்டியம் மாத்திரம் ஆடவில்லை. அதற்கும் அப்பால் சென்று பல கலைஞர்களை உருவாக்கிய ஆளுமை. கார்த்திகா ஏனைய நடன நர்த்தகிகளிடமிருந்து வேறுபட்டிருப்பதற்கு அவரிடமிருக்கும் ஆற்றலும், தேடலும் மாத்திரம் காரணம் அல்ல. நாட்டியக்கலை தொடர்பாக அவர் நீண்டகாலம் ஆய்வுசெய்து நூல்களும் எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார். நடன நர்த்தகியாக மாத்திரமன்றி தமது ஆய்வின் வெளிப்பாடாக நாட்டியக் கலாநிதியாகவும் மிளிர்ந்தவர். இதுவரையில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலம் தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு, நாட்டியக்கடலில் புதிய அலைகள் முதலான நூல்களை வரவாக்கியிருப்பவர. இந்த ஆண்டு தனது பவளவிழாக்காலத்தில் மற்றும் ஒரு நூலை அவர் வரவாக்கியிருக்கிறார். நூலின் பெயர் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்.
இந்த நூல் என்னிடம் வந்து சேர்ந்தபோது, இதனை எவ்வாறு உள்வாங்கப் போகின்றேன் என்ற தயக்கமும் முதலில் வந்தது. சமகாலத்தில் இந்த பொன்னியின் செல்வன் திரைக்கு வந்து நடக்கின்ற அலைப்பறைகளுக்கு மத்தியில், இந்த நூல் எனது வசம் வந்து சேர்ந்தது. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர், அங்கே சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்கள்தான் இருந்தன. இந்தியாவை பல வருடகாலம் தங்களது ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், சுதந்திரத்தையும் தந்துவிட்டு, மூன்று மதங்களையும் ஒரே குடைக்குள் வைத்து இந்து மதம் என்ற பொதுப்பெயரை வைத்துவிட்டு, மகாராணியின் மகுடத்தில் பதிப்பதற்காக கோகினூர் வைரத்தையும் எடுத்துச்சென்றுவிட்டார்கள். மகாராணி மறைந்தபின்னர்தான் அந்தக்கிரீடத்தில் இருப்பவை எங்கெங்கிருந்து சென்றன என்பதும் தெரியவந்துள்ளது. கார்த்திகா கணேசரின் இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன்னர் ஒரு குட்டிக்கதையை சொல்லிவிடுகின்றேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். சொன்னபிறகும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒரு குழந்தை தனது அம்மாவிடம் கேட்கிறது. அம்மா, நான் இந்த உலகத்திற்கு எப்படி வந்தேன்...?