சிங்கப்பூர் இலக்கியம் - சுப்ரபாரதி மணியன் -
49வது சென்னை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூர் இலக்கியம் என்ற ஒரு குறிப்பிடத்தக்க புத்தக அரங்கமும் இடம் பெற்று இருந்தது அந்த அரங்கத்தில் ஹேமா அவர்களின் வாழைமர நோட்டு என்ற நூலை முன்வைத்து சிங்கப்பூர் இலக்கியம் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் ” காரிகாவனம் “ என்ற சிங்கப்பூர் வாழ் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து நான் ஒரு நூலை காவ்யா பதிப்பகம் மூலம் கொண்டு வந்திருக்கிறேன் .அதைத்தவிர ” ஓ.. சிங்கப்பூர் ”என்ற தலைப்பில் அங்கு வசிக்கும் நவாஸ், குமார் உட்பட பல்வேறு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளை எழுதியத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன்.
சிங்கப்பூர் இலக்கியத்தின் முக்கிய கூறுகளாக அந்த எழுத்தாளர்களின் வேராக இருக்கிற தமிழ்நாட்டு மண்ணின் உறவுகள் பற்றியும் பாசப்பிணைப்பு ஏக்கம் பற்றியும் பல்வேறு கதைகளை நாம் பார்க்கலாம் இன்னொரு பக்கம் சிங்கப்பூரில் இடம்பெயர்ந்த சூழலின் அனுபவங்களை பலர் விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஒருவகையில் புலம்பெயர் இலக்கியம் என்ற வகையில் கூட அவர்களின் ஆர்வங்களை எடுத்துக் கொள்ளலாம்.
திருப்பூரில் சக்தி விருது என்று ஒரு விருது ஆண்டுதோறும் பெண் எழுத்தாளர்களுக்கு தரப்படுகிறது. அந்த விருதை சிங்கப்பூரைச் சார்ந்த மணிமாலா மதியழகன் முதல் ஹேமா வரை பலர் பெற்றிருக்கிறார்கள. அந்த திருப்பூர் சக்தி விருது பெற்ற நூல் தான் ” வாழை மர நோட்டுகள் ” என்ற ஹேமா அவர்களின் கட்டுரை நூலாகும்.